

கிறிஸ்தவர்கள் கடைபிடிக்கும் 40 நாள் தவக்காலம், சாம்பல் புதனுடன் நேற்று தொடங்கியது. இதையொட்டி, தேவாலயங்களில் சிறப்பு ஆராதனையும், கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்களில் சிலுவைப்பாதையுடன் கூடிய திருப்பலியும் நடைபெற்றன.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மரித்து, 3-ஆம் நாள் உயிர்த்தெழுந்ததாக கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளில் கூறப்பட்டுள்ளது. இயேசு உயிர்த்தெழுந்த தினத்தை கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர். ஈஸ்டர் பெருவிழாவுக்கு முந்தைய 40 நாட்களை தவக்காலமாக அவர்கள் கடைபிடிக்கின்றனர். தவக்காலத்தின் முதல்நாள் சாம்பல் புதன்கிழமையாக அனுசரிக்கப்படும்.
தவக்காலத்தில் பெரும்பாலான கிறிஸ்தவர்கள் அசைவ உணவுகளை சாப்பிட மாட்டார்கள். மேலும், வீடுகளில் திருமணம், பிறந்தநாள் விழா போன்ற நிகழ்ச்சிகளையும், கொண்டாட்டங்களையும் தவிர்த்து விடுவது வழக்கம். இயேசுவின் சிலுவைப்பாடுகளை நினைவுகூரும் வகையில் கத்தோலிக்க தேவாலயங்களில் வெள்ளிக்கிழமைதோறும் சிலுவைப்பாதை வழிபாடு நடைபெறும். தவக்காலத்தில் ஏழைகளுக்கு உணவு அளிப்பது, தர்ம காரியங்கள் செய்வது என பல்வேறு நற்செயல்களிலும் ஈடுபடுவார்கள்.
இந்த ஆண்டு ஈஸ்டர் பண்டிகை வரும் ஏப்ரல் 12-ம் தேதி கொண்டாடப்படுகிறது. எனவே, புனித வாரத்துக்கு முந்தைய 40 நாட்கள் தவக்காலமாக அனுசரிக்கப்படும். அந்த வகையில், சாம்பல் புதன்கிழமையுடன் தவக்காலம் நேற்று தொடங்கியது. இதையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. சென்னை சாந்தோம் திருத்தலத்தில் பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமையில் திருப்பலியும் சிறப்பு ஆராதனையும் நடைபெற்றன.