

தமிழகம் முழுவதும் 31 ஆயிரம் கோயில்களில் உள்ள 3 லட்சத்து 31 ஆயிரம் சுவாமி சிலைகள் படம்பிடிக்கப்பட்டு, டிஜிட்டல் தரத்துக்கு மாற்றப்பட்டு இணையதள சர்வரில் சேகரிக்கப்பட்டுள்ளது என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
தமிழக கோயில்களில் உள்ள சுவாமி சிலைகள் அரிதிலும் அரிதானவை என்பதால் அவை பாதுகாப்பாக இருக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்த பொன் மாணிக்கவேல் மீது குற்றம் சாட்டி சென்னையைச் சேர்ந்த ஒருவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று நடந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் பி.எச்.அர்விந்த் பாண்டியன் ஆஜராகி, அறநிலையத் துறை இணை ஆணையர் சிவக்குமார் சார்பில் அறிக்கை தாக்கல் செய்தார்.
அதில், தமிழகம் முழுவதும் உள்ள சிலைகளைப் பாதுகாக்க 15 பாதுகாப்பு பெட்டகங்கள் அடங்கிய மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 31 ஆயிரம் கோயில்களில் உள்ள 3 லட்சத்து 31 ஆயிரம் சிலைகள் படம்பிடிக்கப்பட்டு, டிஜிட்டல் தரத்துக்கு மாற்றப்பட்டு இணையதளத்தில் சேகரிக்கப்பட்டுள்ளது.
இன்னும் 3,087 கோயில்களில் தலா ரூ.10 லட்சம் செலவில் சிலைகள் பாதுகாப்பு அறைகள் கட்ட தமிழக அரசு ரூ. 308 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து நீதிபதிகள், தமிழக கோயில்களில் உள்ள சுவாமி சிலைகள் அரிதிலும் அரிதானவை. மிகப் பழமையானவை. இந்த சிலைகள் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டுள்ளதாக நாளிதழ்களிலும் செய்திகள் வெளிவந்துள்ளன. எனவே கோயில் சிலைகளின் பாதுகாப்பு விஷயத்தில் தமிழக அரசு அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும் எனக் கூறி விசாரணையை பிப். 27-ம் தேதிக்கு (இன்று) தள்ளி வைத்துள்ளனர்.