Published : 27 Feb 2020 06:51 AM
Last Updated : 27 Feb 2020 06:51 AM

தென்னிந்தியாவின் முதல் தங்க நகை தொழிற்பூங்கா அறிவிப்பு: நகை உற்பத்தி கேந்திரமாக கோவை நிச்சயம் மாறும்- ஏற்றுமதி, வேலைவாய்ப்பு அதிகரிக்குமென பொற்கொல்லர்கள் நம்பிக்கை

எஸ்.கமலஹாசன்

கோவை

தென்னிந்தியாவிலேயே முதல்முறையாக தங்க நகைக்கென கோவையில்தான் தொழிற்பூங்கா அமைய உள்ளது. இதன் மூலம்கோவை தங்க நகை உற்பத்தி கேந்திரமாக (ஜுவல் ஹப்) மாறுவதுடன், ஏற்றுமதி, வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்றும் பொற்கொல்லர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக பெரிய தொழில்நகரமான கோவையில் தங்கநகை உற்பத்தித் தொழில்பாரம்பரியமாக மேற்கொள்ளப் பட்டு வருகிறது. குறைந்த எடையில், பெரிய அளவிலான நகைகள், சிறந்த வேலைப்பாடுகள் என கோவை நகைக்கு உலகெங்கும் வரவேற்பு உண்டு.

கோவையில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு நகைப் பட்டறைகள் செயல்படுகின்றன. ஏறத்தாழ 2 லட்சம் தொழிலாளர்கள் இதை நம்பியுள்ளனர். 2000-ம்ஆண்டில் 3 லட்சம் தொழிலாளர்கள் தங்க நகைத் தொழிலில் ஈடுபட்ட நிலையில், தொடர் குண்டு வெடிப்பு உள்ளிட்ட காரணங்களால் இந்த எண்ணிக்கை குறைந்துவிட்டது.

எனினும், மும்பைக்கு அடுத்தபடியாக கோவைதான் தங்க நகை தொழிலில் பிரசித்தி பெற்று விளங்குகிறது. கோவையில் தயாரிக்கப்படும் நகைகள், பல்வேறு மாநிலங்கள் மட்டுமின்றி, அமெரிக்கா, ஐரோப்பா, வளைகுடா நாடுகள் உள்ளிட்ட பல்வேறுநாடுகளுக்கும் அனுப்பி வைக்கப் படுகின்றன.

இந்நிலையில், கோவையில் ஒருங்கிணைந்த தங்க நகை தொழிற்பூங்கா அமைக்க வேண்டுமென பொற்கொல்லர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், கோவையில் தங்கநகை தொழிற்பூங்கா அமைக்கப்பட உள்ளதாக சட்டப்பேரவையில் தமிழக ஊரக தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின் அறிவித்துள்ளார். தொண்டாமுத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பேரூர் வட்டத்தில் இதற்கான நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் தொழிற்பூங்கா அமைப்பதற்கான பணிகள் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து கோவை பொற்கொல்லர்கள் கூட்டமைப்பு தலைவர் எஸ்.எம்.கமலஹாசன் `இந்து தமிழ்' செய்தியாளரிடம் கூறியதாவது: தங்கத்தை உருக்குதல், கம்பி நீட்டுதல், எம்போசிங், மேக்கிங், ப்ராசசிங், டிசைனிங், மெருகேற்றுதல், தரக் கட்டுப்பாடு உள்ளிட்டவை ஒரே இடத்தில் அமையும் வகையில், தங்க நகை தொழிற்பூங்கா அமைக்க வேண்டுமென பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம்.

கோவையில் தொழிற்பூங்கா அமைக்கப்படும் என்ற அறிவிப்பு மிகவும் வரவேற்கத்தக்கது. இந்தியாவில் மும்பை, குஜராத், கொல்கத்தாவில் மட்டும்தான் தங்க,வரை நகைகளுக்கான தொழிற்பூங்காக்கள் உள்ளன. தென்னிந்தியாவிலேயே முதல் தங்க நகை தொழிற்பூங்கா கோவையில் அமைக்கப்பட உள்ளது.

பேரூரில் இதற்கான இடத்தை தமிழக அரசு தேர்வு செய்துள்ளது. முதல்கட்டமாக 500 தொழிற்கூடங்கள் அங்கு அமையும். மேலும், மத்திய அரசும் தொழில்நுட்ப உதவிகள், நவீனத் தொழில் உபகரணங்கள், ஏற்றுமதிக்கான ஆலோசனைகளை வழங்கும். இதன் மூலம், புதிய தொழில்முனைவோர் உருவாகி,ஏராளமானோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

தற்போது தினமும் சுமார் 100 கிலோ அளவுக்கு தங்க நகைகள் கோவையிலிருந்து ஏற்றுமதியாகின்றன. இந்த அளவு இரண்டு மடங்காக உயரும். பெரு நிறுவனங்களுடன் போட்டி போடவும் இந்தப் பூங்கா உதவியாக இருக்கும்.

ஜவுளி, இயந்திர உற்பத்தி, கல்வி, மருத்துவத் துறைகளில் சிறந்து விளங்கும் கோவை, தங்க நகை உற்பத்தித் தொழிலிலும் அடுத்த கட்டத்தை எட்டுவதுடன், ஒட்டுமொத்த கோவையின் பொருளாதார வளர்ச்சிக்கும் இது உதவும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x