Published : 26 Feb 2020 09:28 PM
Last Updated : 26 Feb 2020 09:28 PM

ரூ.35 கோடி நிலுவை வைத்துள்ள நுகர்பொருள் வாணிபக் கழகம்: குறைதீர் கூட்டத்தில் மதுரை ஆட்சியரிடம் விவசாயிகள் குமுறல் 

மதுரை

கொள்முதல் செய்த நெல்லுக்குப் பணம் கொடுக்காமல் நுகர்பொருள் வாணிபக் கழகம் ரூ.35 கோடி வரை நிலுவை வைத்துள்ளதாக குறைதீர் கூட்டத்தில் மதுரை ஆட்சியரிடம் விவசாயிகள் தெரிவித்தனர்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் டிஜி.வினய் தலைமையில் இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.தங்கவேல், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் பூபதி மற்றும் அதிகாரிகள் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:

விவசாயி மணவாள கண்ணன்:

மாவட்டத்தில் 80க்கும் மேற்பட்ட நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளன. விவசாயிகளிடம் இருந்து அறுவடை செய்த நெல்லை கொள்முதல் செய்த நுகர்பொருள் வாணிப கழகம், தற்போது வரை அவர்களுக்குப் பணம் வழங்கவில்லை. கொள்முதல் மையங்களில் இருந்து எடை போட்டு நெல்லை குடோன்களுக்கே அவர்கள் எடுத்துச் செல்லவில்லை. திறந்தவெளியில் அவை பாழாகி வருகின்றன. குடோன்களுக்கு எடுத்துச் சென்றால் மட்டுமே விவசாயிகளுக்குப் பணம் கொடுக்க முடியும் என்கிறார்கள். வட்டிக்குக் கடன் வாங்கியோ அல்லது மனைவி நகைகளை அடமானம் வைத்துதான் விவசாயம் செய்கிறோம். உரக் கடைகளில் கூட பாக்கி சொல்லிதான் உரம் வாங்கிப் போடுகின்றனர்.

நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் புகார்:

எங்களுக்குப் போதுமான ஊழியர்கள் இல்லை. லாரிகளும் இல்லை. ஆனாலும், இரவு, பகலாக நேரம் பார்க்காமல் வேலை செய்து கொள்முதல் நிலையத்தில் எடை போட்டு எடுத்த நெல் சிப்பங்களுக்குப் பணம் வழங்கிக் கொண்டுதான் வருகிறோம். ஒரு வாரம் அவகாசம் கொடுங்கள். அனைவருக்கும் கொடுத்துவிடுகிறோம்.

மணவாள கண்ணன்:

அதிகாரிகள் அவர்கள் பிரச்சினைகளையும், அவர்கள் வேலைப் பளுவையும் பற்றிதான் பேசுகிறார்கள். நெல் கொள்முதல் செய்த வகையில் விவசாயிகளுக்கு நுகர்பொருள் வாணிபக் கழகம் ரூ.35 கோடி வரை நிலுவை வைத்துள்ளனர். விவசாயிகள், விற்ற நெல்லுக்குப் பணம் கிடைக்காமல் கடனாளியாக நிற்கிறோம்.

ஆட்சியர் டிஜி.வினய்:

இதுவரை நெல் கொள்முதல் செய்த 2,355 விவசாயிகளுக்கு ஈசிஎஸ் மூலம் நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் பணம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 1,384 பேருக்கு ரூ.16 கோடி மட்டுமே ஒப்படைக்கப்பட வேண்டியுள்ளது. இன்னும் ஒருவாரத்தில் அந்தப் பணமும் ஒப்படைக்கப்பட்டுவிடும்.

விவசாயி ராமன்:

ஒரே அடியாக அதிகாரிகளைக் குறை சொல்லவும் முடியாது. அவர்கள் தூங்கவில்லை. அதற்காக விவசாயிகள் பாதிக்கப்படுவதையும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஆட்சியர் கூடுதல் பணியாளர்களை நியமித்து நெல் கொள்முதல் மையங்களில் விவசாயிகளிடம் வாங்கி நெல்லை எடை போட்டு அவர்களுக்கு உடனுக்குடன் பணம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாயி அடக்கிவீரணன்:

நெல் கொள்முதல் மையங்களில் 40 கிலோ ஒரு சிப்பத்தை எடை போட, லாரிகளில் ஏற்றுவதற்கு அரசு ரூ.18 மட்டுமே ஒதுக்குகிறது. இந்த நிதி போதுமானதாக இல்லை. அதனால், இந்தக் காரணத்தைச் சொல்லி ஆளும்கட்சியினர் விவசாயிகளிடம் 40 கிலோ சிப்பத்திற்கு ரூ.50 வசூல் செய்கின்றனர். இந்த முறைகேட்டை ஆட்சியர் தடுக்க வேண்டும்.

விவசாயி தனிக்கொடி;

கூட்டுறவு வங்களில் கடன் பெறும் விவசாயிகளிடம்வ ரூ.5 ஆயிரம், ரூ.6 ஆயிரம் என ஆண்டுக்குப் பிடிக்கிறார்கள். கேள்வி கேட்கும் விவசாயிகளுக்குக் கடன் கொடுப்பதில்லை. இந்த முறைகேட்டைத் தடுக்கும் விவசாயிகளுக்கு கிசான் கார்டு வழங்க வேண்டும். இந்த கார்டு இருந்தால் முறைகேடு நடக்காது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x