Published : 26 Feb 2020 09:11 PM
Last Updated : 26 Feb 2020 09:11 PM

‘சபாஷ் நண்பரே’ வாருங்கள்; இது ராஜபாட்டை பாதை: ரஜினிக்கு கமல் வாழ்த்து

நடிகர் ரஜினிகாந்த் டெல்லி கலவரம் குறித்துப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய கருத்துகளும், மத்திய அரசைக் கண்டித்ததும் பரபரப்பான விஷயமாக மாறியுள்ள நிலையில் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல் இதை வரவேற்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் இயக்குநர் பாலசந்தரால் வளர்த்தெடுக்கப்பட்டவர்கள். இருவரும் ஆரம்பம் முதலே நண்பர்கள். ஒன்றாகப் படங்களில் நடித்தவர்கள். பின்னர் தங்களுக்குள் முடிவு செய்து தனித்தனியாகப் படம் நடிக்கத் தொடங்கி இருபெரும் ஜாம்பவான்களாக உள்ளனர்.

திரைப்படத்தில் போட்டி இருந்தாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் ரஜினியும் கமலும் சிறந்த நண்பர்கள். அதேபோன்று அரசியல் கட்சி ஆரம்பித்தாலும் இருவரின் நட்பும் மாறவில்லை. சமீபத்தில் ரஜினியின் அரசியல் அறிவிப்பைக் கிண்டல் செய்து 'கோமாளி' படத்தில் காட்சி அமைக்கப்பட்டதை எடுத்துக் கூறி அதை மாற்ற வைத்தார் கமல்.

இருவரும் அரசியலில் இணைந்து ஈடுபடுவீர்களா என்கிற கேள்விக்கு ஏன் இணையக்கூடாது. நிச்சயமாக இணைவோம் என்று ரஜினி கூறினார். மக்களுக்காக நன்மை செய்ய இருவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று கமல் தெரிவித்தார்.

இந்நிலையில் 'அண்ணாத்த' படத்துக்குப் பின்னர் ராஜ்கமல் பிக்சர்ஸுக்கு ரஜினி ஒரு படம் செய்ய உள்ளதாகவும் மார்ச் மாதம் அதன் பூஜை என்ற தகவலும் திரைத்துறையில் உலா வருகிறது. என்னதான் கமலும் ரஜினியும் நண்பர்களாக இருந்தாலும் ரஜினி கட்சி ஆரம்பித்தால் அவர் ஆன்மிக அரசியல் என்கிற போர்வையில் பாஜக பக்கம் போவார். அவருடன் கமல் இணைய முடியாது என்ற கருத்தும் உள்ளது.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் ரஜினியின் இன்றைய பேட்டியில் உண்மையைச் சொன்னால் பாஜக ஆள் என்கிறார்கள். வருத்தமாக இருக்கிறது என்று கூறிய ரஜினி, மத்திய அரசைக் கண்டிப்பதாகவும் பேட்டி அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பேட்டி வெளியான ஒரு மணிநேரத்திற்குள் கமல், ரஜினியை வாழ்த்தி ‘சபாஷ் நண்பரே’ என்று ட்வீட் செய்துள்ளார்.

உங்கள் வழி தனி வழி அல்ல. நீங்கள் வரும் வழி சிறந்த வழி ஓர் (தமிழ்) இனமே நடக்கும் ராஜபாட்டை. தமிழினமே நம் பக்கம் தான் என்பது போன்று தெரிவித்துள்ளார்.

அவரது ட்விட்டர் பதிவு:

“சபாஷ் நண்பர் @rajinikanth அவர்களே, அப்படி வாங்க. இந்த வழி நல்ல வழி. தனி வழி அல்ல, ஒரு இனமே நடக்கும் ராஜ பாட்டை. வருக, வாழ்த்துகள்”.

இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.

கமலின் இந்தக் கருத்து மீண்டும் கமல், ரஜினி அரசியல் களத்தில் இணைந்து செயல்படுவார்கள் என்பதை உணர்த்துவதாக உள்ளது என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x