

திண்டுக்கல் அருகே பில்லமநாயக்கன்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. காளைகளை அடக்கியபோது 30 வீரர்கள் காயமடைந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் பில்லமநாயக்கன்பட்டியில் கதிர்நரசிங்கப்பெருமாள் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்றது.
திண்டுக்கல், மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, தேனி, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 550 காளைகள் பங்கேற்றன.
மருத்துவபரிசோதனைக்கு பின்னரே காளைகள் அனுமதிக்கப்பட்டன. பல்வேறு பிரிவுகளாக மாடுபிடிவீரர்கள் 400 பேர் களம் இறங்கினர்.
திண்டுக்கல் கோட்டாட்சியர் உஷா ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கிவைத்தார். வாடிவாசல் வழியாக முதலில் கோயில்காளை அவிழ்த்துவிடப்பட்டது.
இதைத்தொடர்ந்து ஒன்றன்பின் ஒன்றாக காளைகள் வாடிவாசல் வழியே வெளியேறின. சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் அடக்கினர்.
வீரர்களிடம் சிக்காமல் சில காளைகள் சென்றன. காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் சிக்காமல் சென்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும் பிரிட்ஜ், வாஷிங்மிஷின், பீரோ, சேர், ஹெல்மெட், சைக்கிள், பாத்திரங்கள், மின்விசிறி உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.
ஜல்லிக்கட்டுப்போட்டியில் பங்கேற்ற 30 மாடுபிடிவீரர்கள் காயமடைந்தனர். இவர்களுக்கு உடனடியாக அங்கேயே அமைக்கப்பட்டிருந்த மருத்துவமுகாமில் சிகிச்சையளிக்கப்பட்டது. நான்கு பேர் படுகாயங்களுடன் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
200- க்கும்மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.