சேலம்  - உளுந்தூர்பேட்டை சாலையில் 9 ஆண்டுகளாக துளிர்விடாத 2 லட்சம் மரக்கன்றுகள்: விவசாயிகள் வேதனை

சேலம்  - உளுந்தூர்பேட்டை சாலையில் 9 ஆண்டுகளாக துளிர்விடாத 2 லட்சம் மரக்கன்றுகள்: விவசாயிகள் வேதனை
Updated on
2 min read

சேலம் - உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் மரக்கன்றுகள் வைக்கப்பட்டதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், கடந்த 9 ஆண்டுகளாக 2 லட்சம் மரக்கன்றுகள் துளிர்விடாத மர்மம் குறித்து விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

சேலம் - உளுந்தூர்பேட்டை இடையே 164 கி.மீ. தொலைவுக்கு ஆயிரம் கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில், கடந்த 2009-ம் ஆண்டு பணி தொடங்கப்பட்டது. இப்பணி 2012-ம் ஆண்டு நிறைவுற்றது. சேலம் - உளுந்தூர்பேட்டை சாலை ஒரு வழிச்சாலையாக இருந்தபோது, இந்த வழித்தடத்தில் நாவல், புளியன், வேம்பு, அரசன், புங்கன் உள்பட ஒரு லட்சம் மரங்கள் இருந்தன. நான்கு வழிச்சாலை பணிக்காக அனைத்து மரங்களும் வெட்டிச் சாய்க்கப்பட்டன.

இதற்குப் பதிலாக இந்த வழித்தடத்தில் 4 லட்சம் மரக்கன்றுகள் வைக்கப்படும் என சாலைப் பணியை மேற்கொண்ட தனியார் நிறுவனம் உறுதிப் பத்திரம் அளித்திருந்தது. சேலம் - உளுந்தூர்பேட்டை நான்கு வழிச் சாலைப் பணி முடிவடைந்து 9 ஆண்டுகள் கடந்த நிலையில், சாலை ஓரங்களில் மரக்கன்றுகள் குறிப்பிடும்படி ஏதுமில்லை. சாலை ஓரங்களில் மரங்களின்றி வெயிலின் தாக்கத்தில் பொதுமக்கள் பயணித்து வரும் நிலையே இன்றும் நீடித்து வருகிறது. இந்த வழித்தடத்தின் இருபுறங்களிலும் மரக்கன்றுகளை வைத்து, பராமரித்து, மழை வளம் பெருக்கத் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைகளால் பாதிக்கப்பட்டோர் சங்கத்தின் மாநிலத் தலைவர் கோபாலகிருஷ்ணன் கூறியது:
''சேலம் - உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையை ரிலையன்ஸ் நிறுவனம் 15 ஆண்டுகளுக்கு சுங்கம் வசூலிக்கும் உரிமையுடன், ஆயிரம் கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் அமைத்தது. நான்கு வழிச் சாலைக்காக ஒரு லட்சம் மரங்கள் வெட்டப்பட்டன. இதற்கு மாற்றாக 4 லட்சம் மரங்களை சேலம் - உளுந்தூர் தேசிய நெடுஞ்சாலை, மலைக்குன்றுகள், பள்ளி, கல்லூரி வளாகங்கள், பொது பயன்பாட்டு இடங்களில் வைப்பதாக, ரிலையன்ஸ் நிறுவனம் உறுதி அளித்தது. ஆனால், நான்கு வழிச் சாலைப் பணி முடிந்து 9 ஆண்டுகள் கடந்த நிலையில், தேசிய நெடுஞ்சாலையில் மரக்கன்றுகள் இல்லாமல், வெறிச்சோடி உள்ளது. சாலை நடுவே அரளிச் செடிகளை மட்டும் வைத்துப் பராமரித்து வருகின்றனர்.

சேலம் - உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் மரக்கன்றுகள் வைத்தது குறித்துத் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி எழுப்பியிருந்தோம். இதற்கு வந்த பதிலில், 10 மீட்டர் இடைவெளியில் 2 லட்சம் மரக்கன்றுகள் வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. கடந்த 9 ஆண்டுகளாக இந்த 2 லட்சம் மரக்கன்றுகளும் துளிர்விடாமல் இருப்பதற்கான மர்மம் தெரியாமல், விவசாயிகளும் பொதுமக்களும் வேதனை அடைந்துள்ளனர்.

வெயில் காலம் ஆரம்பித்து விட்ட நிலையில், தேசிய நெடுஞ்சாலையில் மரக்கன்றுகளை வைத்துப் பராமரிப்பதன் மூலம் பயணிகளுக்கு நிழலும், பறவை, குரங்கு உள்ளிட்ட உயிரினங்கள் அடைய இடமும் கிடைக்கும். மரக்கன்றுகளை தேசிய நெடுஞ்சாலையில் புதியதாக வைத்து, முறையாகப் பராமரிக்கத் தேவையான நடவடிக்கையை தேசிய நெடுஞ்சாலைத் துறை திட்ட அதிகாரிகள் எடுக்க வேண்டும்''.

இவ்வாறு கோபாலகிருஷ்ணன் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in