

குடியரசு துணைத் தலைவர் வரவேற்பு நிகழ்வுக்குச் சென்ற எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமியை போலீஸார் நிறுத்தி சோதனையிட முயன்றதால் அவரும், என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏக்களும் நிகழ்ச்சியைப் புறக்கணித்தனர்.
புதுச்சேரிக்கு குடியரசுத் தலைவர், பிரதமர், குடியரசு துணைத் தலைவர் ஆகியோர் வரும்போது புதுச்சேரி அரசு சார்பில் அவர்கள் வந்திறங்கும் விமான நிலையத்தில் வரவேற்பு அளிப்பது மரபு.
இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் துணை நிலை ஆளுநர், முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் பங்கேற்பதும் வழக்கம். இதற்காக புதுச்சேரி அரசு சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் எம்எல்ஏக்களுக்கு அழைப்பு அனுப்பப்படும்.
அந்தவகையில் இன்று புதுச்சேரி வந்திருந்த குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவிற்கான வரவேற்பு நிகழ்வில் பங்கேற்க புதுச்சேரி சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமிக்கும், எம்எல்ஏக்களுக்கும் அரசிடம் இருந்து அழைப்பிதழ் சென்றது.
இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஜெயபால், சுகுமாரன், டிபிஆர் செல்வம் ஆகியோர் லாஸ்பேட்டை விமான நிலையத்துக்குச் சென்றனர்.
துணைநிலை ஆளுநர் கிரண்பேடியைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி விமான நிலையத்தினுள் சென்றபோது அவரை சோதனை மேற்கொள்ள பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் முயன்றனர்.
அப்போது அவரிடம் தமிழக போலீஸா என்று அவர் விசாரித்தபோது, புதுச்சேரி போலீஸ் என்பது ரங்கசாமிக்குத் தெரிந்தது. அதையடுத்து அவர் வரவேற்பு நிகழ்வில் பங்கேற்காமல் உடனடியாக காரில் ஏறித் திரும்பினார். அவருடன் என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏக்களும் திரும்பினர்.
இது தொடர்பாக என்.ஆர்.காங்கிரஸ் பொது செயலாளர் பாலன் கூறுகையில், "விமான நிலையத்திற்குச் சென்ற எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமியிடம் சோதனை நடத்த முயன்றது கண்டிக்கதக்கது. இது எதிர்க்கட்சித் தலைவரை அவமானப்படுத்தும் அரசின் செயல். இதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டார்.