

மதுரை விமான நிலையம் விரிவாக்கத்திற்கு கடந்த 5 ஆண்டுகளாக ஆலோசனைக்கூட்டம் நடத்தப்படவில்லை. நாங்கள் வந்த பின்னரே முயற்சி எடுத்துள்ளோம் என எம்.பி சு.வெங்கடேசன் தெரிவித்தார்.
மதுரை விமானநிலையம் விரிவாக்கம் தொடர்பாக இன்று சு.வெங்கடேசன் எம்.பி., மதுரையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மதுரை விமான நிலைய விரிவாகத்திற்காக கையகப்படுத்தப்பட்ட மொத்த நிலப்பரப்பு 615.92 ஏக்கர். இதன் இழப்பீட்டுத் தொகை ரூ.94.70 கோடியாகும். கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு இழப்பீடு வழங்குவதில் சுணக்கம் உள்ளது. இந்த இழப்பீட்டில் 2018-19 வரை ரூ.15 கோடி மட்டுமே நில உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டது.
நானும் மாணிக்கம் தாகூர் எம்.பி.,யும்,எடுத்த முயற்சியால் கடந்த 7 மாதங்களில் ரூ.35 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் இதுவரை 916 பட்டாதாரர்களுக்கு ரூ.54 கோடி வழங்கப்பட்டுள்ளது.
மதுரையில் பன்னாட்டு விமான சேவைக்காக தற்போது ஒப்பந்தம் நடந்துள்ளது. இதனை செயல்படுத்த நானும், மாணிக்கம் தாகூர் எம்பியும், பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளோம். இதற்காக, மத்திய விமான போக்குவரத்து அமைச்சரையும் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளோம். அடுத்ததாக தென்மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கட்சி மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்களை மதுரைக்கு அழைத்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ரூ.34 கோடியில் விமான நிலைய ஓடுபாதை அகலப்படுத்தும் பணி வரும் ஜூனில் தொடங்கி, டிசம்பருக்குள் முடிக்கப்பட உள்ளது. இப்பணி முடிந்தால் இரவு நேர விமான சேவை தொடங்கும்.
மேலும் விமான நிலையத்துக்கு மதுரையின் முக்கிய பேருந்து நிலையங்களில் இருந்து குளிர்சாதன பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. வாரத்தின் 4 நாட்களாக உள்ள மதுரை-டெல்லி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை, மார்ச் முதல் தினசரி இயக்கப்படும்.
டெல்லி-மதுரை-திருச்சி-அபுதாபி விமான சேவை இயக்கவும் முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. சரக்கு விமானம் வந்து செல்லவும், கையாளவும் உள்ள சிரமங்கள் சரி செய்யப்பட்டால் மட்டுமே சரக்கு விமானப் போக்குவரத்து துவங்கும். விமான நிலையம் விரிவாகத்திற்கு முதலில் நிலம் கையக்கப்படுத்ப்பட வேண்டும்.
மதுரை சர்வதேச விமான நிலையமானால் திருச்சி விமான நிலையம் பாதிக்கப்படும் என திருச்சி அரசியல்வாதிகள் முட்டுக்கட்டை போடுவதாக தொடர்ந்து கருத்து உள்ளது. இங்கு கடந்த 5 ஆண்டுகளாக ஆலோசனைக் கூட்டம் நடத்தவில்லை. நாங்கள் வந்த பின்பே இந்த முயற்சியை எடுத்துள்ளோம். தென் மாவட்ட வளர்ச்சிக்கு மதுரை விமான நிலைய விரிவாக்கம் முக்கியமானது.
எய்ம்ஸ் - காலதாமதம்:
எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தமிழக அரசு நிலம் கையகப்படுத்திக் கொடுக்க காலதாமதம் ஆனது. மதுரையுடன் அறிவிக்கப்பட்ட ஜம்மு எய்ம்ஸ் மருத்துவமனையில் வரும் ஜூனில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. ஆனால் மதுரையில் வரும் 2021-ம் ஆண்டில் மாணவர் சேர்க்கை துவங்குவமா? என்ற சந்தேகம் உள்ளது.
2021ம் ஆண்டில் மாணவர் சேர்க்கை துவங்க வேண்டும் என்றால் தமிழக அரசு முதலில் தற்காலிக கட்டிடம் 300 படுக்கைகள் கொண்ட கட்டிடம் உடனடியாக வழங்க வேண்டும். மதுரை காமராசர் பல்கலைக்கழக பழைய கட்டிடத்தைக்கூட வழங்கலாம். இதற்காக நானும், மாணிக்கம் தாகூர் எம்பியும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம் என்றார்.