Published : 26 Feb 2020 02:01 PM
Last Updated : 26 Feb 2020 02:01 PM

ராஜ்யசபா எம்.பி. பதவியைத் தருவார்கள் என எதிர்பார்க்கிறோம்: பிரேமலதா பேட்டி

கூட்டணி தர்மத்தை மதிக்கிறோம். அதிமுகவும் கூட்டணி தர்மத்தை மதித்து தேமுதிகவுக்கு ராஜ்யசபா எம்.பி. பதவியைத் தரும் என எதிர்பார்ப்பதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

தமிழகத்தில் 6 மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவி காலியாகிறது. இதற்கான தேர்தல் வர உள்ள நிலையில் அதிமுக, திமுக தலா 3 எம்.பி.க்களை தேர்வு செய்யும் வாய்ப்பு உள்ளது. இதனால் கூட்டணிக் கட்சிகள் தங்களுக்கான எம்.பி. பதவியைப் பெற முயல்கின்றன. அதிமுக கூட்டணியில் கடந்தமுறை பாமகவின் அன்புமணி ராமதாஸுக்கு எம்.பி. பதவி அளிக்கப்பட்டது. திமுகவில் வைகோவுக்கு அளிக்கப்பட்டது.

இம்முறை திமுகவில் கூட்டணிக் கட்சிகளுக்கு இடம் இல்லை என்பது தெளிவாகிவிட்டது. அதிமுகவில் கூட்டணிக் கட்சிகளுக்கு தலா ஒரு எம்.பி. பதவி அளிக்கப்படுவதாக பேசி முடிவானதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று சென்னை விமான நிலையத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

“சிஏஏவுக்கு எதிரான போராட்டத்தைப் பற்றிதான் எல்லோரும் இப்போது பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதன் பிரதிபலிப்பு டெல்லியில் எதிரொலித்து 19 உயிர்களை இழந்துள்ளோம். நாம் சிஏஏ என்பது பற்றி குழப்பமான நிலையில் உள்ளோம். சிஏஏவுக்கு எதிரான போராட்டத்தை எதிர்க்கட்சிகள் தூண்டிவிடுகின்றன. மதத்தைச் சொல்லி, இனத்தைத் தூண்டி அதன் மூலம் அரசியல் ஆதாயம் அடையப் பார்க்கிறார்கள்.

முதலில் இந்தியாவின் பாதுகாப்பு மிக முக்கியம். அதை ஒவ்வொருவரும் கருத்தில் கொள்ளவேண்டும். அதே நேரத்தில் இங்கு வாழும் இஸ்லாமிய மக்களுக்கு பிரச்சினை வந்தால் முதல் ஆளாக களத்தில் தேமுதிக அதை எதிர்க்கும்.

அதேநேரத்தில் பிரதமர், முதல்வரும் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள். இங்கிருப்பவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் வராது என்று தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள். அதே நேரத்தில் பங்களாதேஷ் போன்ற இடங்களில் வருபவர்கள் இங்கிருப்பது மூலம் குழப்பம் உள்ளது. அதைத் தீர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்கள்.

ஆனால், எதிர்க்கட்சிகள் சூழ்ச்சி செய்து இதை அரசியலாக்குகின்றன. மக்கள் தெளிவடைந்து நாட்டின் பாதுகாப்பு குறித்து முடிவு செய்தால் பிரச்சினை வராது.

தேமுதிக கூட்டணி தர்மத்தை எப்போதும் கடைப்பிடிக்கின்ற கட்சி. முதல்வரும் கூட்டணி தர்மத்தைக் கடைப்பிடிப்பார் என எதிர்பார்க்கிறோம். அதன் அடிப்படையில் ராஜ்ய சபா எம்.பி. பதவியை தேமுதிகவுக்குத் தருவார் என எதிர்பார்க்கிறோம். ஏற்கெனவே கூட்டணி அமைத்தபோது பேசியதுதான், பிறகு பார்ப்போம் என்று தெரிவித்தார்கள். அதனால் எதிர்பார்க்கிறோம்”.

இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x