

ஊழலில் முதல்வரையே மிஞ்சக்கூடியவர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் இன்று (பிப்.26) நடைபெற்ற கட்சி பிரமுகரின் இல்லத் திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
"இந்த ஆட்சி ஊழலில் கொடிகட்டிப் பறக்கிறது. முதல்வர் தொடங்கி அமைச்சர்கள் வரை ஊழல் செய்துகொண்டிருக்கின்றனர். அதில் நம்பர் 1 யார் என்றால், முதல்வரையே மிஞ்சக்கூடியவர் யார் என்றால், உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தான். சென்னை மாநகராட்சி உட்பட எல்லா மாநகராட்சிகளிலும் நடக்கும் எல்லா பணிகளிலும் அவர் ஊழல் செய்வதாக ஒரு வழக்கு இருக்கிறது. அதை விசாரிக்க வேண்டும் என லஞ்ச ஒழிப்புத் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை விசாரிக்க கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் எடுத்துக்கொண்டனர். அதன்பிறகு, அமைச்சர் மீதான குற்றச்சாட்டில் எந்த முகாந்திரமும் இல்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கின்றனர். அப்போது நீதிபதி, இதனை முறையாக விசாரிக்கவில்லை எனவும் விசாரணையின் கோப்புகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
அதேபோன்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதும் ஊழல் குற்றச்சாட்டு உள்ளது. அதுகுறித்து விசாரித்த லஞ்சம் ஒழிப்புத் துறை இதேபோன்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இல்லை என நீதிமன்றத்தில் தெரிவித்தனர். விசாரணை நடத்த வேண்டும் என்பதற்கான கோப்பிலும், விசாரணை முடிவுகள் அடங்கிய கோப்பிலும் கையெழுத்திடுபவர் முதல்வர் பழனிசாமிதான். முதல்வராக பொறுப்பேற்றதிலிருந்து இதுவரை கிட்டத்தட்ட 16 ஆயிரம் கோப்புகளில் கையெழுத்திட்டதாக முதல்வர் கூறுகிறார். ஊழல் குறித்த கையெழுத்துகளும் இந்த கணக்கில் வருகிறது.
ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது என நாம் சொன்னோமா? ஓபிஎஸ் தான் சொன்னார். அவருக்கு முதல்வர் பதவி கிடைக்கவில்லை என்பதால், தியானம் செய்து ஆவியுடன் பேசிவிட்டு கூறினார். சமாதானம் செய்வதற்காக விசாரணை ஆணையத்தை முதல்வர் அமைத்தார். துணை முதல்வர் பதவியையும் அளித்தனர். 3 மாதங்களுக்குள் ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கை கொடுக்க வேண்டும் என்றனர். ஆனால், 3 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதுவரை ஆணையத்திற்கு 7 முறை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதில் மர்மம் இருக்கிறது. முழு விசாரணை வெளியே வந்து விட்டால் முதல்வரும் துணை முதல்வரும் வெளியில் இருக்க முடியாது, சிறைக்குள் தான் இருக்க வேண்டும். இன்றைக்கு வேண்டுமானால் அவர்கள் தப்பிக்கலாம். இன்னும் தேர்தல் வருவதற்கு ஓராண்டுதான் இருக்கிறது. நாங்கள் தான் ஆட்சியில் அமரப்போகிறோம். ஆட்சியில் அமர்ந்ததற்கு பிறகு விடுவோம் என நினைக்கிறீர்களா? அண்ணன் துரைமுருகனுக்குக் கூட இரக்க மனசு இருக்கலாம், நான் விட மாட்டேன். யாராக இருந்தாலும் சரி. ஏனென்றல் இறந்தவர் தமிழக முதல்வராக இருந்தவர்".
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.