

ஜனவரி முதல் மே வரை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் எனும் கால வரம்பை மாற்றி ஆண்டு முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என திருத்தம் மேற்கொள்ளக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் உலகம்பட்டியைச் சேர்ந்த ஆவுடையப்பன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அதில், "சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள அடைக்கலம்பட்டி கிராமத்தில் ஜூலை மாதம் ஜல்லிக்கட்டு போட்டியை நடைபெறும்.
அங்கு உள்ள அடைக்கலம் காத்த அய்யனார் கோவில் திருவிழாவில் வடமாடு மஞ்சு விரட்டு போட்டி நடைபெறும். இந்த போட்டிக்கு உரிய அனுமதி வழங்க வேண்டும் என்று கோரி இருந்தேன்.
ஆனால் மாவட்ட நிர்வாகம் ஜல்லிக்கட்டு ஆண்டு தோறும் ஜனவரி முதல் மே மாதம் வரை நடைபெறும் மஞ்சுவிரட்டு, ஜல்லிகட்டு போட்டிகளுக்கு தான் அனுமதி வழங்கப்படும் என்று தமிழக அரசு பிறப்பித்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது என்று கூறி மஞ்சுவிரட்டு போட்டி நடத்த அனுமதி மறுத்து உத்தரவிட்டனர்.
இது ஏற்புடையது அல்ல. எனவே, ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக தமிழக அரசு 31.1.2017-ல் மிருகவதை தடைச் சட்டத்தில் திருத்தம் செய்து வெளியிட்டது.
அதில் ஜனவரி முதல் மே வரை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் எனும் கால வரையறையை மாற்றி ஆண்டு முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என திருத்தம் மேற்கொள்ள உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரசியலமைப்பு விதிமீறல் இருந்தால் தலையிடலாம், இது அரசின் கொள்கை ரீதியான முடிவு" எனக் கூறினார்.
இதையடுத்து மனுதாரர் மனுவை திரும்பப் பெறுவதாக தெரிவித்தார். இதையேற்ற நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.