

தமிழகத்தின் கிராமப்புறங்களிலும் கடந்த 15 ஆண்டுகளில் 300 சதவீதம் சர்க்கரை வியாதி பெருகி இருப்பது வேதனை அளிக்கும் ஒன்று என பாமக நிறுவனர் ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார்.
மனிதர்களைப் பாதித்து மெல்ல மெல்ல முடமாக்கும் வியாதிகளில் நீரிழிவு நோய் பிரதான இடத்தை வகிக்கிறது. உடல் பருமன், சரியான உணவுப் பழக்கவழக்கத்தைப் பேணாதது, உடற்பயிற்சியின்மை, பரம்பரையாகத் தொடர்வது, வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றம், அதிக மன அழுத்தமான வாழ்க்கை போன்றவற்றால் நீரிழிவு நோய் மனிதர்களை தாக்குகிறது.
ஒருமுறை வந்துவிட்டால் வாழ்நாள் முழுவதும் தொடரும் இதைக் கட்டுப்பாட்டில் வைக்க உடற்பயிற்சி, வாக்கிங், உணவுப்பழக்கம் உள்ளிட்டவை முக்கியம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். முன்னர் வயோதிகர்களுக்கும், பணம் படைத்தவர்களுக்கும் வந்த நீரிழிவு நோய் தற்போது மத்தியதர வர்க்க மனிதர்களைத் தாக்குகின்றது.
அதையும் தாண்டி அதிக உடலுழைப்பில் வாழும் கிராம மக்களை அதிகம் தாக்கியுள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளதாக ராமதாஸ் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு:
“தமிழகத்தின் கிராமப்புறங்களில் நீரிழிவு நோய் கடந்த 15 ஆண்டுகளில் 300% அதிகரித்து இருப்பதாக ஆய்வுகளில் தெரியவந்திருப்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. நகரங்களைப் போல கிராமங்களிலும் வாழ்க்கை முறை மாறியிருப்பதுதான் இதற்கு முக்கியக் காரணம் என்பது கசப்பான உண்மை!
நீரிழிவு நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டியது மத்திய, மாநில அரசின் கடமை. நீரிழிவு நோயின் பாதிப்புகள், அதைக் கட்டுப்படுத்துவது மற்றும் தடுப்பதற்காக மேற்கொள்ள வேண்டிய உடற்பயிற்சிகள், உணவுக் கட்டுப்பாடுகள், யோகா ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்”.
இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.