

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் ஓய்வு பெற்ற என்எல்சி ஊழியர் வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதில் அவரது கார் சேதமடைந்தது. இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெய்வேலி வட்டம் 5-ல் வசித்து வருபவர் ராஜேந்திரன். இவர் ஓய்வு பெற்ற என்எல்சி ஊழியர். தொமுசவில் பகுதிச் செயலாளராக இருந்துள்ளார். இவர் நேற்று உறவினர் வீட்டு விசேஷத்திற்காக குடும்பத்துடன் சென்னை சென்றுள்ளார்.
இந்நிலையில், இன்று (பிப்.26) அதிகாலையில் அவர் வீட்டின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர். இதில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 'சைலோ' கார் தீப்பற்றி எரிந்தது. அப்பொழுது அந்த வழியாகச் சென்ற ஆம்புலன்ஸ் டிரைவர் ஒருவர் இதனைப் பார்த்துவிட்டு என்எல்சி தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்துக்கு சென்ற என்எல்சி தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்து தீ பரவாமல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதில் காரின் பின் பக்கம் எரிந்து சேதமடைந்தது.
இதுகுறித்துத் தகவல் அறிந்த நெய்வேலி டிஎஸ்பி லோகநாதன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.