Last Updated : 26 Feb, 2020 09:42 AM

 

Published : 26 Feb 2020 09:42 AM
Last Updated : 26 Feb 2020 09:42 AM

குடியுரிமை சட்டம் குறித்து எடப்பாடியாரின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் ஸ்டாலின் சட்டப்பேரவையில் இருந்து ஓடிப்போனது ஏன்?- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 

சிவகாசி

குடியுரிமை சட்டம் குறித்து சட்டசபையில் எடப்பாடியாரின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் ஸ்டாலின் ஓடிப்போனது ஏன் என்று பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கேள்வி எழுப்பினார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரத்தில் ஜெயலலிதாவின் 72-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் உள்ள சிறப்பம்சங்களை விளக்கியும் மம்சாபுரம் பேரூராட்சியில் உள்ள அனைத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா தலைமை வைத்தார். சிறப்பு அழைப்பாளராக துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமை கழக பேச்சாளர் நடிகை பபிதா பேசினார்கள்.

கூட்டத்தில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசும்போது, ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. கட்சி நிர்வாகிகள் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர்.

அதிமுகவின் இளைஞர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. எம்பி தேர்தலில் தோல்வியுற்றாலும் உள்ளாட்சித் தேர்தலில் பாதிக்குமேல் அண்ணா திமுக வெற்றி பெற்றுள்ளது.

இரட்டை இலை சின்னத்திற்கு இருக்கும் மரியாதை என்றுமே மறையாது. அதிமுகவுக்கு என்றுமே அழிவு காலம் கிடையாது. அழிக்க நினைப்பவர்கள் அழிந்து தான் போவார்கள். எம்பி தொகுதிகளிலும் ஜெயித்துவிட்டோம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் சந்தோஷமாக இல்லை. ஏன் என்று கேட்டால் ஜெயித்தும் ஏதும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் தமிழர் பிரச்சினை குறித்து திமுக எம்பிக்கள் பேசுவது கிடையாது. தமிழகத்திற்கு 11 மருத்துவ கல்லூரியை பெற்றுக் கொடுத்தவர் தமிழக முதல்வர் எடப்பாடியார். விருதுநகர் மாவட்டத்தில் மருத்துவ கல்லூரிக்கு வரும் மார்ச் 1-ம் தேதி அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைக்க தமிழக முதல்வர் விருதுநகர் வருகை தருகின்றார்.

ஏழை எளிய மக்களுக்காக நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் இயக்கம் அண்ணா திராவிட முன்னேற்றக்கழக இயக்கம். விரைவில் நடைபெற உள்ள மம்சாபுரம் பேரூராட்சி தேர்தலில் தலைவர் மற்றும் கவுன்சிலர் பதவிகளை அதிமுக கைப்பற்றும்.

தமிழகத்தில் எப்போதும் அதிமுக அலைதான் வீசும். அண்ணா திமுகவை அழிக்கவே முடியாது. நாங்கள் சாகாவரம் பெற்று வந்தவர்கள். தமிழகத்தின் முதல்வராக ஸ்டாலின் வர வாய்ப்பே கிடையாது.

அவருக்கு அந்த யோகம் கிடையாது. ஒரு கட்சி வளர்கிறதா என்பதை ஒரு ஜவுளிக் கடையில் சென்று தெரிந்துகொள்ளலாம். ஜவுளிக் கடைக்குச் சென்று எந்தக் கட்சி வேட்டி, சேலைகள் அதிகமாக விற்பனை ஆகின்றன என்பதை தெரிந்து கொண்டாலே அந்த கட்சியின் வளர்ச்சி குறித்து எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம்.

தற்போது ஜவுளிக் கடைகளில் அண்ணா திமுக கரை வேட்டி தான் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. உழைக்கும் தொண்டர்களுக்கு அண்ணா திமுகவில் என்றும் உரிய மரியாதை உண்டு. பெண்களுக்கு திட்டங்களை அள்ளிக் கொடுக்கின்ற ஆட்சியாக அதிமுக ஆட்சி உள்ளது.

தமிழக முதல்வர் எடப்பாடியார் ஏழை எளிய மக்களின் நிலையறிந்து திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். குடியுரிமை சட்டம் தொடர்பாக இஸ்லாமியர்களை திமுகவினர் தூண்டிவிடுகின்றன.

சட்டசபை கூட்டத்தொடரில் எடப்பாடியார் அவர்களின் கேள்விக்கு பதில் கூற முடியாமல் ஓடிப் போனவர் தான் ஸ்டாலின். கலவரத்தை தூண்டிவிட்டு ஆட்சிக்கு வரத் துடிக்கும் திமுக தலைவர் ஸ்டாலின் கனவு ஒருக்காலும் நிறைவேறாது. எந்த தேர்தல் வந்தாலும் வாக்காளர்கள் அதிமுகவிற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்று பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x