Published : 26 Feb 2020 08:16 AM
Last Updated : 26 Feb 2020 08:16 AM

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கும் 18 வயதுக்கு மேலான மகளிருக்கு காப்பகம்- தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

பாலியல் உள்ளிட்ட கொடிய குற்றங்களால் பாதிக்கப்படும் 18 வயதுக்குமேற்பட்ட பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு காப்பகம் அமைப்பது தொடர்பாக 8 வாரங்களுக்குள் தமிழக அரசு கொள்கை முடிவெடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பெண், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: எனது கணவர் சென்னையில் பணிபுரிகிறார். எங்களுக்கு ஒரு மகன்,மகள் உள்ளனர். 17 வயதாகும் மகள் உடல் மற்றும் மன வளர்ச்சிகுன்றியவர். நான் கூலி வேலைக்குச் சென்றதைப் பயன்படுத்தி பக்கத்து வீட்டில் வசிக்கும் 55 வயதான பொன்ராஜ், மகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதன்காரணமாக என் மகள் கர்ப்பமானார்.

இதுதொடர்பாக பொன்ராஜ் மீது கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் பிப்.3-ம் தேதி போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்தனர். பொன்ராஜ் குடும்பத்தினர் அரசியல் மற்றும் பண செல்வாக்கு மிக்கவர்கள். இதனால் எங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கவும், என் மகளின் வயிற்றில் வளரும் கருவைக் கலைக்க அனுமதி வழங்கவும், இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, மனுதாரரின் மகளை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். அதன்படி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவக் குழுவினர் மனுதாரரின் மகளை பரிசோதித்து, அவர் வயிற்றில் 24 வாரக் கரு வளர்வதாகவும், கரு கலைப்புக்கு ஏற்ற உடல் நிலையில் அவர் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து மனுதாரரின் மகளின் வயிற்றில் வளரும் கருவைகலைக்கவும், கீழமை நீதிமன்றத்தில் குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதால் மரபணுச் சோதனைக்காக கருவைப் பாதுகாப்பாக வைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் மேலும் கூறிஇருப்பதாவது: தமிழகத்தில் 18வயதைத் தாண்டிய பெண்களுக்கான மறுவாழ்வு இல்லங்கள் இல்லை எனத் தெரிகிறது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர் மைனர்பெண். அவர் தாயாரின் பராமரிப்பில் இருந்தபோது பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார். இதுபோன்ற சூழலில் கருக்கலைப்புக்குப் பிறகும் அந்தப் பெண்ணுக்கு இதுபோன்ற பாதிப்பு ஏற்படாது என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை.

இதனால், கருக்கலைப்புடன் நின்றுவிடாமல் கருக்கலைப்புக்கு பிந்தைய கவனிப்பும் அவருக்குத் தேவைப்படுகிறது. எனவே மனுதாரரின் மகளுக்கு கருக்கலைப்பு முதல் அவர் உடல் நிலை சீரடையும் வரை தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதி கண்காணித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

தமிழகத்தில் ஆதரவற்ற பெண்கள் மற்றும் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட கொடிய குற்றங்களால் பாதிக்கப்படும் 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான காப்பகம் அமைப்பதில் கவனம் செலுத்த வேண்டும். இதுதொடர்பாக தமிழக சமூக நலத் துறைச் செயலர் மற்ற துறைகளின் செயலர்களுடன் ஆலோசனை நடத்தி 8 வாரங்களுக்குள் கொள்கை முடிவெடுக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x