

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மருத்துவம் படித்துவந்த டாக்டர் சத்யா(32) கடந்த 20-ம் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த கொலையை செய்ததாக டாக்டர் சத்யா தங்கியிருந்த குடியிருப்பிலேயே வசித்த திரிபுராவை சேர்ந்த ஹரிந்தம் தீப்நாத்(22) என்பவரை கீழ்ப்பாக்கம் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். டாக்டர் சத்யா வைத்திருந்த செல்போனை திருடுவதற்காக ஏற்பட்ட மோதலில் கொலை நடந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது கொலையில் ஏற்பட்டுள்ள பல சந்தேகங்களுக்கு இதுவரை விடை தெரியவில்லை. சத்யாவின் கணவரான ஜேசு(35), பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிகிறார். இவர் கீழ்ப்பாக்கம் காவல் துணை ஆணையர் பரமேஷ்குமாரை நேற்று சந்தித்து ஒரு புகார் மனுவை கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:
இந்த கொலையில் ஒன்றுக் கும் மேற்பட்ட நபர்கள் சம்பந் தப்பட்டிருக்கலாம். கொலையை தொழிலாக செய்பவர் அல்லது மருத்துவத்துறையை சேர்ந்தவர் இந்த கொலையை செய்திருக்க வாய்ப்பு உள்ளது. கொலை நடந்த வீட்டில் கைரேகை பதிவுகள் எதுவுமே கிடைக்கவில்லை என்று கூறுகிறார்கள். நீதிமன்றத்தில் கைரேகை சான்று இல்லாமல் குற்றவாளியை எப்படி அடையாளம் காட்ட முடியும். அங்கு பணிபுரிந்த வேலைக்கார பெண் கடந்த ஒரு வாரமாக ஏன் பணிக்கு வரவில்லை? கொலையாளியின் ரத்தம் படிந்த டி-ஷர்ட் மற்றும் கொலை செய்த நபர் அதே குடியிருப்பில் இருந்தும் மோப்ப நாய் அதை ஏன் கண்டுபிடிக்கவில்லை?
காவல் துறையினர் கூறும் ஆதாரங்கள் அனைத்தும் சம்பவத் துக்கு பின்னர் கொலையாளியுடன் தொடர்புபடுத்தி கூறப்பட்டவை யாக உள்ளன. கொலைக்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை.
காவல் துறையினர் கூறும் ஆதாரங்கள் அனைத்தும் கொலை யாளி சட்டரீதியாக தப்புவதற்கு வசதியாக இருக்க காரணம் என்ன? என்று தெரியவில்லை.
எனவே இந்த வழக்கை இன்னும் தீவிரமாக விசாரித்து உண்மையை வெளியே கொண்டுவரும்படி கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்தப் புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.