

பொதுப்பணித் துறை என்ற பெயரில் போலி ஸ்டிக்கர் ஒட்டி,அடையாறு ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ளிச்சென்ற 3 லாரிகள் பிடிபட்டுள்ளன.
சென்னையில் அடையாறு ஆற்றை தூர்வாருதல் மற்றும்கரைகளைப் பலப்படுத்தும் பணி சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தூர்வாரும்போது ஆற்றில் அள்ளப்படும் மணலை சிலர் லாரிகள் மூலம் திருடுவதாக புகார் எழுந்தது.
இதையடுத்து அடையாறு, கோட்டூர்புரம், அபிராமபுரம் உள்ளிட்ட ஆறு தூர்வாரப்படும் பகுதிகளில் போலீஸார் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில் அடையாறில் இருந்து மணல் ஏற்றிக்கொண்டு அபிராமபுரம் கிரீன்வேஸ் சாலையில் நேற்று காலைவந்த 3 லாரிகளை மடக்கி, அதற்குரிய ஆவணங்களை போலீஸார் சரிபார்த்தனர்.
அப்போது அந்த லாரியில் ‘பொதுப்பணித் துறை பணிக்காக’ என போலியாக ஸ்டிக்கர் ஒட்டியிருப்பதும், அடையாறில் குவித்து வைக்கப்பட்டிருக்கும் ஆற்று மணலை திருட்டுத்தனமாக கொண்டு வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து 3 லாரிகளையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக லாரியில் வந்தவர்களிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.