சமூக வலைதளங்களில் அவதூறு: நடிகை ஸ்ரீ ரெட்டி காவல் ஆணையரிடம் புகார்

சமூக வலைதளங்களில் அவதூறு: நடிகை ஸ்ரீ ரெட்டி காவல் ஆணையரிடம் புகார்
Updated on
1 min read

தனக்குக் கொலை மிரட்டல் விடுத்து, ஆண் நண்பர்கள் குறித்து அவதூறு பேசுவதாக துணை நடிகை, நடன இயக்குநர் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை ஸ்ரீ ரெட்டி பரபரப்பு புகார் அளித்தார். யூடியூபில் என்னைப் பற்றி தவறாகப் பதிவு செய்தால் மான நஷ்ட வழக்குத் தொடருவேன் என்றும் தெரிவித்தார்.

பரபரப்புக்குப் பெயர் போன நடிகை ஸ்ரீ ரெட்டி. இவர் இன்று மாலை சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்தார். காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

“தெலுங்குத் திரையுலகில் துணை நடிகையாக இருந்து வரும் கராத்தே கல்யாணி மற்றும் நடன இயக்குநர் ராகேஷ் ஆகிய இருவரும் பொதுவெளியிலும், சமூக வலைதளங்களிலும் என்னைப் பற்றி கடந்த 2 ஆண்டுகளாக அவதூறாகவும், மிகவும் கீழ்த்தரமாகவும் வதந்திகளைப் பரப்பி வருகின்றனர்.

எனக்கு உள்ள ஆண் நண்பர்கள் குறித்தும், அவர்களுடன் நான் பழகும் விதம் குறித்தும் கொச்சைப்படுத்தும் விதமாக பேசி வரும் அவர்கள், என் மீது பெட்ரோல் குண்டு வீசி எரிக்க வேண்டும் எனக் கூறி கொலை மிரட்டல் விடுக்கின்றனர்.

எனது கவுரவத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் விதமாகச் செயல்பட்டு வரும் துணை நடிகை கராத்தே கல்யாணி மற்றும் நடன இயக்குநர் ராகேஷ் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டி காவல் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளேன். அவர்களும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளனர்.

எனது அனுமதியின்றி எனது சொந்த விஷயங்கள் தொடர்பாக பல யூடியூப் சேனல்கள் பதிவுகள் வெளியிட்டு வருவதை நான் விரும்பவில்லை. அத்தகையை செயல்களில் இனி ஈடுபடுவோர் மீது மான நஷ்ட வழக்குத் தொடுக்க உள்ளேன்”.

இவ்வாறு ஸ்ரீ ரெட்டி தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in