

புதுச்சேரி கோட்டங்குப்பத்தில் காதலி உயிரிழந்த நிலையில் வெளியூரில் இருந்த காதலன், காதலியின் உடலைக் காண சொந்த ஊர் வந்தார். இந்நிலையில் அவர் 6 பேர் கொண்ட கும்பலால் கடத்தப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார்.
வானூர் அருகே பெரிய கோட்டக்குப்பத்தில் வசிப்பவர் சங்கர் (47). இவரது மகன் ராகவன் (22). இவர் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பெயிண்டராகப் பணியாற்றி வந்தார். ராகவனும் அதே பகுதியைச் சேர்ந்த அருணா என்ற இளம்பெண்ணும் காதலித்துள்ளனர். இதுபற்றி அறிந்த பெண்ணின் வீட்டார் கண்டித்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த அப்பெண் அண்மையில் தற்கொலை செய்து கொண்டார். காதலி தற்கொலை செய்துகொண்டதைக் கேள்விப்பட்ட ராகவன், தெலங்கானாவில் இருந்து கோட்டக்குப்பம் வந்துள்ளார். காதலி உடலைக் காண வந்த அவரை பிரச்சினை ஏற்படும் என நண்பர்கள் தடுத்துவிட்டனர்.
இந்நிலையில் தனது நண்பர்களான சிவநேசன், சஞ்சய் ஆகியோருடன் நேற்று முன் தினம் மாலை பைக்கில் புதுச்சேரி நோக்கிச் சென்றுள்ளார். அப்போது கோட்டக்குப்பம் ரவுண்டானா அருகே 2 பைக்கில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் நண்பர்களை விரட்டிவிட்டு ராகவனைக் கடத்திச் சென்றது.
பின்னர் அக்கும்பல் கோட்டைமேடு பகுதிக்கு கடத்திச் சென்று ராகவனை அரிவாளால் வெட்டிக் கொன்று பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டுத் தப்பியது. நண்பர்கள் அளித்த புகாரின் பேரில் ராகவனைத் தேடிய கோட்டக்குப்பம் போலீஸார், எரிந்த நிலையில் பிணமாக ராகவன் உடலை மீட்டனர்.
பின்னர் ராகவன் உடல் புதுவை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில் புதுச்சேரி, சாமி தோட்டத்தைச் சேர்ந்த பாலாஜி (20), ரஞ்சித்குமார் (25), சந்தோஷ் (19), பெரிய கோட்டக்குப்பத்தைச் சேர்ந்த பிரகாஷ் (40), அருண்குமார் (20), தினேஷ் என்கிற பிரவின்குமார் (23), புதுச்சேரி குருஸ் குப்பம் சஞ்சய் (23) ஆகியோர் நேற்று கோட்டக்குப்பம் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.