கோப்புப் படம்
கோப்புப் படம்

கிறிஸ்தவர்களின் தவக்காலம்  நாளை தொடக்கம்: ஆலயங்களில் சாம்பல் புதன் சிறப்பு வழிபாடுகளுக்கு ஏற்பாடு

Published on

கிறிஸ்தவர்களின் தவக்காலம் நாளை தொடங்குகிறது. அதனால், கிறிஸ்தவ ஆலயங்களில் சாம்பல் புதன் சிறப்பு வழிபாடுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் சாம்பல் புதன் தொடங்கி ஈஸ்டர் வரை தவக்காலம் கடைபிடிப்பது வழக்கம்.

இந்த ஆண்டிற்கான தவக்காலம் நாளை (26-ம் தேதி) சாம்பல் புதன் தொடங்கி ஏப்ரல் 12-ம் தேதி ஈஸ்டர் வரை நடைபெறுகிறது. தவக்காலத்தின் தொடக்க நாளாகிய நாளை அனைத்து ஆலயங்களிலும் சிறப்புத் திருப்பலிகள் மற்றும் ஆராதனைகள் நடைபெறும் போது கிறிஸ்தவர்கள் நெற்றியில் பாதிரியார்கள் சாம்பலால் மனந்திரும்பி நற்செய்தியை நம்பு என்று சொல்லி சிலுவை அடையாளமிடுவார்.

இதற்கான சாம்பல் கடந்த ஆண்டு குருத்தோலை ஞாயிறன்று வழங்கப்பட்ட குருத்தோலைகளைஆலயத்தில் கொண்டு கொடுக்கப்பட்டு அவை எரிக்கப்பட்டு சாம்பலாக்கப்படும். அந்த சாம்பலே கிறிஸ்தவர்கள் நெற்றியில் சாம்பலாகப் பூசப்படும்.

தொடர்ந்து கிறிஸ்தவர்கள் இந்த தவக்காலத்தில் பல்வேறு பக்தி முயற்ச்சிகளில் ஈடுபடுவார்கள். வெள்ளிக்கிழமைதோறும் சிலுவைப் பாதை ஜெப வழிபாடு நடைபெறும்.

மற்றும் திருத்தலங்களுக்கு புனித யாத்திரை மேற்கொள்ளுதல், பாதயாத்திரை மேற்கொள்ளுதல், ஆலயங்களில் நற்செய்தி பெருவிழா, தியானம் போன்றவை நடைபெறும்.

மேலும் ஆடம்பர செலவுகளை தவிர்த்தல், சுபநிகழ்ச்சிகள் நடத்தப்படுவதை தவிர்த்தல், நோன்பு இருத்தல். அசைவ உணவு தவிர்த்தல் போன்ற வகையில் தங்கள் தவக்காலத்தை கிறிஸ்தவர்கள் கடைபிடிக்கிறார்கள்.

இதையொட்டி, நாளை அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் மற்றும் சாம்பல் புதன் சிறப்புத் திருப்பலி நடக்க உள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in