

விருதுநகரில் மார்ச் 1-ம் தேதி தமிழக முதல்வர் பங்கேற்கும் விழாவில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கோஷமிட திட்டமிட்டுள்ளோரை கண்டறிந்து கண்காணித்து அவர்களைத் தடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி உத்தரவிட்டார்.
விருதுநகரில் மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டுவிழா மார்ச் 1-ம் தேதி நடைபெறுகிறது. இதில், தமிழக முதல்வர் பழனிசாமி கலந்துகொண்டு சீவலப்பேரி கூட்டுக் குடிநீர்த் திட்டம்,3 நகராட்சி பகுதிகளுக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டங்களைத் தொடங்கிவைத்து, 25 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, புதிய கட்டிடங்களைத் திறந்துவைக்கிறார்.
இவ்விழா தொடர்பாக அனைத்துத்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் இன்று நடைபெற்றது.
அப்போது அமைச்சர் பேசுகையில், இவ்விழாவில், முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் மட்டுமின்றி மத்திய சுகாதாரத்துறை அமைச்சரும் பங்கேற்க உள்ளார்.
கடந்த முறை விருதுநகரில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடியதுபோல் சிறப்பாக விழா ஏற்பாடுகளைத் திட்டமிட்டுச் செயல்படுத்த வேண்டும்.
நூற்றாண்டு விழா நிறைவின்போது ஒரு பெண் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயன்றார். அதுபோன்ற சம்பவங்கள் இப்போது நடக்கக் கூடாது. அந்த அளவுக்கு அனைத்து நுழைவாயில் பகுதியிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட வேண்டும். விழா அரங்கிற்குள் வருவோர் அனைவரையும் தீவிர சோதனை செய்த பின்னரே அனுதிக்க வேண்டும்.
இது பொதுமக்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி. அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் வருவார்கள். விழாவில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராகவும் என்.ஆர்.சி. பிரச்சினைகள் குறித்தும் கோஷமிட சிலர் திட்டமிடலாம். அவர்களைக் கண்காணித்து தடுத்து நிறுத்த வேண்டும். பயனாளிகள் பட்டியலில் பிரச்சினைக்கு உரியவர்களைத் தவிர்த்துவிட வேண்டும்.
அந்தந்த வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து பயனாளிகளை வாகனம் மூலம் விழாவுக்கு அழைத்துவர வேண்டும். அவர்களுக்கு மதிய உணவும் வழங்கப்பட வேண்டும். ஆனால், விழா நடைபெறும் பகுதியில் எங்கும் தடை செய்யப்பட்ட பிளாஸ்ட்டிக் பைகள் தென்படக் கூடாது என்றார்.
ஆலோசனைக் கூட்டத்தில், பொதுசுகாதாரம் மற்றும் நோய்தடுப்புத்துறை இணைச் செயலர் அ.சிவஞானம், மாவட்ட ஆட்சியர் இரா.கண்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் கோ.உதயகுமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.பெருமாள், சிவகாசி சார்-ஆட்சியர் திணேஷ்குமார் உள்பட அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
அதைத்தொடர்ந்து, விழா நடைபெறும் இடத்தில் அரங்கம் அமைக்கும் பணிகளை பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நேரில் பார்வையிட்டு அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.