சென்னை மெட்ரோ ரயில் பயணிகளைக் கவரும் புதிய திட்டம் வருகிறது: திரைப்படங்கள், டிவி சீரியல்கள் பார்க்க, டவுன்லோடு செய்ய ‘ஆப்’விரைவில் 

சென்னை மெட்ரோ ரயில் பயணிகளைக் கவரும் புதிய திட்டம் வருகிறது: திரைப்படங்கள், டிவி சீரியல்கள் பார்க்க, டவுன்லோடு செய்ய ‘ஆப்’விரைவில் 
Updated on
1 min read

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இன்னும் சில நாட்களில் ‘சுகர்பாக்ஸ்’ என்ற ஆப் மூலம் ரயிலுக்குள்ளான பொழுதுபோக்கு அமைப்பை உருவாக்கவுள்ளது. ரயிலில் பயணம் செய்யும் போது வீடியோக்கள், திரைப்படங்களை இலவசமாகப் பார்க்கவும் டவுன்லோடு செய்யவும் பயணிகளைக் கவரும் விதமாக இந்தத் திட்டம் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இதற்காக உருவாக்கப்படும் வைஃபை மூலம் திரைப்படங்கள், வீடியோக்களை பார்க்கவும் பதிவிறக்கம் செய்யவும் முடியும். இந்த வசதி இந்த வார இறுதி முதல் அமலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பயணிகள் செய்ய வேண்டியதெல்லாம் சுகர்பாக்ஸ் என்ற ஆப்-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்ய வேண்டும். அதன் பிறகு வீடியோக்களை இலவசமாகப் பார்க்கலாம். “தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகியவை உட்பட்ட மொழிகளில் பயணிகள் தொலைக்காட்சித் தொடர்கள் முதல் திரைப்படங்களை பயணத்தின் போதும் பார்க்கலாம் அல்லது டவுன்லோடு செய்து வைத்துக் கொண்டு ஆஃப் லைனிலும் பார்க்கலாம். திரைப்படம் ஒன்றை டவுன் லோடு செய்ய ஆகும் நேரம் வெறும் 10 நிமிடங்கள்தான். இந்த ஆப் இத்தகைய அதிவேக டவுன்லோடு வசதி கொண்டது. பயணத்தின் போது பயணிகளை மகிழ்விக்கவும் பொது போக்குவரத்தை அதிகம் பயன்படுத்த ஊக்குவிக்கவுமே இந்த ஏற்பாடு” என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த கவர்ச்சியான புதிய திட்டம் குறித்த விளம்பரங்களை ஏற்கெனவே மெட்ரோ ரயிலில் செய்து வருகிறது சி.எம்.ஆர்.எல்.

மெட்ரோ ரயிலின் 45 கிமீ தூரத்தை சுமார் 1.15 லட்சம் மக்கள் தினசரி பயன்படுத்தி வருகின்றனர், சென்னை வண்ணாரப்பேட்டையிலிருந்து விமான நிலையம் செல்ல 35-40 நிமிடங்கள் ஆகிறது. இந்தப் பயண நேரத்தில் அவர்கள் விரும்பிய பொழுதுபோக்கு அம்சங்களை அளிக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in