Published : 25 Feb 2020 01:24 PM
Last Updated : 25 Feb 2020 01:24 PM

எழுத்தாளர் கே.வி.ஜெயஸ்ரீக்கு மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது 

தமிழில் சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகடாமி விருது எழுத்தாளர் கே.வி.ஜெயஶ்ரீக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மலையாள எழுத்தாளர் மனோஜ் குரூரின் ‘நிலம் பூத்து மலர்ந்த நாள்’ நாவல் மொழிபெயர்ப்புக்காக இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் முக்கிய 24 மொழிகளில் வெளியாகும் சிறுகதை, நாவல், இலக்கிய விமர்சனம் போன்றவற்றுக்கு ஆண்டுதோறும் சாகித்ய அகாடமி விருது வழங்கப்படுகிறது. 2019-ம் ஆண்டின் தமிழ் மொழிக்கான விருதுக்கு எழுத்தாளர் சோ. தர்மன் தேர்வு செய்யப்பட்டார். அவர் எழுதிய ‘சூல்’ என்ற நாவலுக்காக இந்த விருது வழங்கப்படுவதாக கடந்த டிசம்பர் மாதம் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. கன்னட மொழிக்கு மட்டும் விருது அறிவிக்கப்படவில்லை.

மலையாள எழுத்தாளர் மனோஜ் குரூரின் ‘நிலம் பூத்து மலர்ந்த நாள்’ என்ற நாவலை கே.வி.ஜெயஸ்ரீ மிகச் சிறப்பாக தமிழில் மொழி பெயர்த்தார். வம்சி இதனை வெளியிட்டது. சங்க காலப் பாணர், கூத்தர்களின் ஆற்றுப்படையாக உரைநடையில் வந்துள்ள இந்நாவல், பாரியின் படுகொலையைக் கதைக்களனாகக் கொண்டது. இந்நிலையில் இந்த நாவல் மொழிபெயர்ப்புக்காக தமிழ் எழுத்தாளர் கே.வி.ஜெயஶ்ரீக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

50 ஆயிரம் ரொக்கப் பணமும், செம்புப் பட்டயமும் விருதாக அளிக்கப்படுவது வழக்கம். விருது வழங்கப்படும் நாள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

கே.வி.ஜெயஸ்ரீ எழுதிய ‘நிலம் பூத்து மலர்ந்த நாள்’ நாவலின் பகுதி:

நாங்கள் பாரியின் அரண்மனையை அடைந்தோம். பேங்கன் முன்னால் சென்றான். கல்லில் உருவான தூண்கள். பலவிதமான உருவங்களால் வடிவமைக்கப்பட்ட மேற்கூரை. விரிந்து பரந்த மைதானம் போன்ற அரசவை. அங்கே நீள விதானத்தின் கீழே அரசுக் கட்டிலில் வானோரின் வடிவில் அமர்ந்திருப்பவர் வேள்பாரிதானென்று யாரும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. நாங்கள் அனைவரும் குனிந்து வணங்கியபோது வேள் கையுயர்த்தி எழுந்துகொண்டார்.

“கபிலர் சொல்லி வந்தவர்கள்தானே? திறமையுடையவர்கள் என்றறிய வேறென்ன வேண்டும்?” அதைக் கேட்டவுடன் எங்களின் இதயத் துடிப்பு அதிகரித்தது.

“அருகதையற்றதைச் சொல்வதெனில் எங்களை மன்னித்துவிடுங்கள். ஆன்றோர்களின் முன்னால் ஆடிப்பாடிப் பழக்கமில்லை. பெரும்புலவரான கபிலரின் கருணையினால் தங்களின் முன் வந்து நிற்கிறோம். தவறுகள் கண்டால் மன்னிக்க வேண்டும்”

புன்னகைத்த பாரி தொடங்குங்கள் என்பதாகக் கையுயர்த்தினார். பறைகளையும் யாழ்களையும் எடுத்து வரிசையாக நின்றோம். அங்கே நான் கபிலரையோ சாமியையோ

பார்க்கவில்லை. பெரும்பாணனிடம் மல்லிகையை எடுத்துக் கொடுத்து, நானும் பாடுவதற்குத் தயாரானேன். அனைவரும் சேர்ந்து ஓரொட்டு வாரம், ஈரொட்டு வாரம் என்ற கடவுள் வாழ்த்துகளோடு தொடங்கினோம். பிறகு பெரும்பாணனும், நானும், சித்திரையுமாக வேளை வாழ்த்தி ஒரு பாட்டையும் பாடினோம்.

“தன்னுள் பிறக்கும் நீர் ஊற்றுக்கு அன்றி மண்ணில் பிறந்த போராளிகளில் இவரும் துளியும் தொட முடியாத நாட்டை வில்லின் நுனியால் அடக்குகிறான் பாரி”

பாடி முடித்த பின்னும் மன்னனை நேராகப் பார்க்கும் தைரியம் வரவில்லை. எனினும் அகக் கூத்துக்குத் தயாரானோம். எல்லரியும் ஆகூளியும் தட்டையும் குழலும் ஒவ்வொன்றாக வரிசைகட்டி நின்றன. கூத்தர்கள் கொச்சகக் கூத்தும் பின்னர் மெய்க்கூத்தும் ஆடினர். முறை தவறாமல் எல்லாம் மிகச் சரியாக வருகிறதென்று எனக்குத் தோன்றியது. சரியான கணக்கில் அகக்கூத்து முடிந்தபோது புறக்கூத்தின் சில அடவுகளை ஆடச் சொன்னார் அரசர். இருவகைக் கூத்தின் எண்ணிக்கைகளும் வடிவங்களும் தமக்குள் கலந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டுமென்று கூத்தர்கள் மெதுவாகப் பேசிக்கொண்டனர். விறலிகள் சேர்ந்து குரவைக் கூத்தாடினர்.

அடுத்ததாக வரிக்கூத்து தொடங்கியவுடன் எங்களின் சுதி கூடியது. இயக்கம் முறுகி ஆடலும் பாடலும் உச்சத்தைத் தொட்டபோது பார்வையாளர்களும் எங்களோடு இணைந்தனர். எங்களைத் தவிர மற்றவர்கள் சேர்ந்தால் ஒத்திசைவு போய்விடும் என்ற பயமும் வந்தது. ஆனாலும் மறுத்துச் சொல்லவோ நிறுத்தவோ நாங்கள் துணியவில்லை. ஆட்டமும் மேளத்தின் முறுக்கும் எல்லை கடந்த நிலையில் இது என்ன வெறியாட்டமா என்று தோன்ற ஆரம்பித்தது. நான் பெரும்பாணனைப் பார்த்தேன். கூத்தை நிறுத்திவிடுவோமென்று நாங்கள் கண்களால் முடிவுசெய்தோம். இறைவனையும் அரசனையும் வாழ்த்தி, கூத்தை நிறுத்தியபோது வேள்பாரி புன்னகைத்தபடியே எழுந்து நின்றார்.

“என் கண்களும் உள்ளமும் குளிர்ந்திருக்கின்றன. கூத்தை நிறுத்தும்போதும் பார்த்துத் தீரவில்லையென்ற எண்ணம் தோன்ற வேண்டும். ஆடல் பாடலின் அகம் புறம் அறிந்தவர்கள் நீங்கள். நான் உங்களுக்கு எதைத் தந்தால் நீங்கள் மகிழ்வீர்கள்? என்ன வேண்டுமென்று தயங்காமல் கேளுங்கள்” பெரும்பாணன் தாழ்ந்து வணங்கி குரல் செருமி நிற்கவே,

“எங்களுக்கு இந்த நாடு வேண்டும்” என்றொரு குரல் கேட்டது.

யார் அது? பெரும்பாணனும் நானும் விக்கித்து நின்றோம். சூழ்ந்திருந்தவர்கள் அனைவரும் நடுங்கி நின்றனர். ஆட்டத்திற்கிடையில் எங்களோடு இணைந்துகொண்ட யாரோ ஒருவரின் குரல் அது. வேள்பாரி அதிர்ந்து நின்றார்.

நாங்கள் தடுப்பதற்கு முன்னரே எங்களுடன் நின்றிருந்தவர்களுள் சிலர் முன்னேறிச் சென்றனர். “எங்களுக்கு உங்களின் இந்த நாட்டை வழங்கக் கனிவு காட்டுங்கள்.”

பாதுகாவலர்களும் படை வீரர்களும் அவர்களைச் சுற்றி வளைத்தனர். பாரி காவலர்களை விலக்கினான்.

“என்னுடையது எதையும் மற்றவர்களுக்குக் கொடுக்கத் தயங்காதவன் நான். எனினும் இது ஒரு சதிச் செயல். நீங்கள் யார்? உண்மையைச் சொல்லுங்கள்” பாரியைப் போலவே நாங்களும் சதிக்கப்பட்டோமென்பதைப் புரிந்துகொண்டோம். எனினும் எதையும் பேசும் நிலையில் நாங்கள் இல்லை.

“யார் எவரென்று பார்க்காமல் பெரும்பொருள் அருள்பவர் அல்லவா நீங்கள்? பின் எதற்காக அதைத் தெரிந்துகொள்ள வேண்டும்?” அவர்களுள் ஒருவன் ஓரடி முன்னேறினான்.

“ஆடுநர்க்கும் பாடுநர்க்கும், உண்ணவும் உடுக்கவுமில்லாத இரவலர்க்கும் எதையும் நான் கொடுப்பேன். ஆனாலும் சதிச்செயலை நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன்”

பாரியின் கனிவான கண்கள் இப்போது கனன்றுகொண்டிருந்தன.

“இந்த நாட்டை நாங்கள் கைப்பற்றுகிறோம். படை வீரர்கள் அரண்மனையைச் சுற்றி வளைத்துவிட்டனர். உயிர் வேண்டுமென்றால் கீழடங்குக”

இடைவாளை உருவி வேள்பாரி முன்னே பாய்ந்தார். ஆனால் ஓர் எட்டு வைப்பதற்குள் நல்லவனான அந்த வேள் வெட்டப்பட்டு நிலத்தில் சாய்ந்தார். அவருடன் நின்றிருந்த படைவீரர்களாலேயே அவர் வெட்டப்பட்டார் என்பதைத் தெரிந்துகொண்டோம். கூக்குரல்களும் அரவங்களுமெழுந்தன. உடனிருப்பவர்கள் யாரென்றோ அல்லாதவர்கள் யாரென்றோ தெரிந்துகொள்ள முடியவில்லை. எங்களுடைய ஆட்களை அழைத்துக்கொண்டு நான் வெளியே ஓடினேன். பெண்கள் உரக்க ஓலமிட்டபடியே கூடவே ஓடிவந்தனர். யாரெல்லாமோ எங்களைத் தடுத்தனர். சிலர் எங்களை விடுவிக்கப் பார்த்தார்கள். ஓடி வெளியேறும்போது உடல் முழுவதும் குருதியில் குளித்திருப்பதை நான் உணர்ந்தேன். நடக்க முடியாமல் நான் மயங்கிச் சரிந்தேன்.

யார் யாரோ என் உடலைக் கடந்து சென்றனர். அவர்களுள் ஒருவன் என்னைத் திரும்பிப் பார்த்தான். சாமியல்லவா அது? இல்லை, மயிலன். காலங்கள் பின்னிட்டாலும் என் மகனை என்னால் அடையாளம் காண முடியும்.

எங்கள் ஆட்கள் என்னைச் சுற்றி நிற்கின்றனர். நெல்லக்கிளியும் சித்திரையும் சீரையும் கதறியழுதவாறே என்னருகில் இருக்கின்றனர். நான் கைச்சுட்டிய போதும் மீண்டும் எங்கள் பார்வை எட்டுவதற்குள் அவன் ஓடிக் கூட்டத்துக்குள் மறைந்துவிட்டான்.

“நெல்லக்கிளி நம்முடைய மயிலன்” கண்களில் ஒரு வெள்ளைப் படலம் மூடிக்கொண்டது. சுற்றி நிறையும் கூக்குரல்கள் தவிர வேறொன்றும் என் நினைவிலில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x