

பல்லடம் அருகே பாரத ஸ்டேட் வங்கிக் கிளையின் ஜன்னல் கம்பிகளை அறுத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பணம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வங்கியின்பாதுகாப்பு பெட்டகத்தை (லாக்கர்) திறக்க இயலாததால் திருட்டுபோன பொருட்களின் மதிப்பை கணக்கீடு செய்வதில் நேற்று இரவுவரை கால தாமதம் ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் - தாராபுரம் சாலையில் கள்ளிப்பாளையம் பகுதியில் பாரத ஸ்டேட் வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது. 2 நாள் விடுமுறைக்கு பிறகு, நேற்று காலை வங்கிக்கு சென்ற அதிகாரிகள், பக்கவாட்டு ஜன்னல் கம்பிகள் அறுக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே பாதுகாப்பு பெட்டகத்தில் துளையிடப்பட்டு இருந்ததும் தெரியவந்தது. உடனடியாக காமநாயக்கன்பாளையம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மித்தல், பல்லடம் சரக துணைக் காவல் கண்காணிப்பாளர் முருகவேல் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. வங்கியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. இரவு நேர காவலாளிகள் யாரும் இல்லை.
ஏற்கெனவே கொள்ளை முயற்சி
சம்பவம் குறித்து காவல் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘கடந்த சில மாதங்களுக்கு முன்பே இந்த வங்கியில் ஜன்னலைத் திறந்து உள்ளே புகுந்த நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். அப்போதே வங்கி நிர்வாகிகளிடம் இரவு நேர காவலாளிகளை நியமிக்க அறிவுறுத்தப்பட்டது. ஆனால் நியமிக்கப்படவில்லை. இதையறிந்த கும்பலே இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்க வாய்ப்புள்ளது.
வங்கி செயல்படும் இடம் கிராமப் பகுதி என்பதால் நள்ளிரவு நேரங்களில் மக்கள் நடமாட்டம் பெரிய அளவில் இருக்காது. இதையும் சாதகமாக பயன்படுத்தியுள்ளனர். முதலில் வங்கியை சுற்றியுள்ள கண்காணிப்பு கேமராக்களை திருடி விட்டு, பிறகு கொள்ளைசம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். வங்கியின் பக்கவாட்டு ஜன்னல்கண்ணாடியை உடைத்து, கம்பிகளை அறுத்து உள்ளே புகுந்துள்ளனர்.
பாதுகாப்புப் பெட்டகத்தில் துளையிட்டு பணம், நகைகளைகொள்ளை அடித்துள்ளனர். வாடிக்கையாளர்களின் பாதுகாப்புபெட்டகங்களும் திறக்கப்பட்டுள்ளன. வங்கியின் பிரதான பாதுகாப்பு பெட்டகம் கோளாறு காரணமாக திறக்க முடியாத நிலையில் இருந்தது. இதனால் அதைத்திறக்க கோவையில் இருந்து தொழில்நுட்ப பிரிவு அதிகாரிகள்இரவு வந்தடைவார்கள். பாதுகாப்புபெட்டகத்தை திறந்த பிறகே எவ்வளவு பணம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளன என்பதுதெரியவரும். வங்கிக்கு அருகிலுள்ள கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரித்து வருகிறோம்’ என்றனர். 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடப்பதாக காவல்கண்காணிப்பாளர் திஷா மித்தல் என்றார்.