Published : 25 Feb 2020 07:15 AM
Last Updated : 25 Feb 2020 07:15 AM

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட புதிய தொழில் திட்டங்களுக்கு தடை: அறிவிப்பாணை வெளியிட்டது தமிழக அரசு

சென்னை

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட புதிய தொழில் திட்டங்கள் தொடங்குவதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.

காவிரி டெல்டா பகுதிகளைப் பாதுகாக்க வேளாண் மண்டலமாக மாற்ற வகை செய்யும், "தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்படுத்துதல் சட்டம் 2020” ஆளுநரின் ஒப்புதலைத் தொடர்ந்து தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டது. இதையடுத்து இச்சட்டம் உடனடியாக அமலுக்கு வந்தது.

இச்சட்டத்தின்படி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களின் அனைத்துப் பகுதிகள், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த காட்டுமன்னார்கோவில், மேல்புவனகிரி, கீரப்பாளையம், பரங்கிப்பேட்டை, குமராட்சி ஆகிய வட்டங்கள், புதுக்கோட்டை மாவட்டத்தின் அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி, திருவரங்குளம், கறம்பக்குடிஆகிய வட்டங்கள் ஆகியன முழுமையான பாதுகாக்கப்பட்ட வேளாண் பகுதிகளாகத் திகழும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட 8 புதிய தொழில் திட்டங்கள் தொடங்குவதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை நேற்று வெளியிட்ட அறிவிப்பாணையில் கூறியிருப்பதாவது:

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல பகுதிகளில் சில தொழில்திட்டங்கள் மற்றும் அதன் செயல்பாடுகளால் நிலத்தடி நீர்மட்டம், சரணாலயங்கள், நஞ்சை நிலங்கள், பல்லுயிர் பெருக்கம் போன்றவை பாதிக்கப்பட்டு, பருவநிலை மாற்றம் காரணமாக நீடித்த வேளாண் முன்னேற்றம், வாழ்வாதாரம், விவசாயிகளின் பாதுகாப்புக்கு பாதிப்பு உருவாகும் பெரும் அபாயம் உள்ளது.

எனவே, விவசாய நிலங்களைப் பாதுகாப்பதற்காக பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலசட்டத்தை அரசு நிறைவேற்றியுள்ளது. இந்த சட்டத்தின்படி, வேளாண் மண்டல பகுதிகளில் சில புதிய தொழில் திட்டங்கள் அல்லது புதிய செயல்பாடுகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. அதனால், சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம்1986, பிரிவு 5-ன்படி மேற்கண்ட பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டல பகுதிகளில் இரும்புத்தாது செயல்முறை ஆலை, ஒருங்கிணைந்த எஃகு ஆலை அல்லதுஇளகு இரும்பு ஆலை, துத்தநாகம், செம்பு, அலுமினியம் உருக்காலைகள், விலங்குகளின் எலும்பு,கொம்பு, குளம்புகள் மற்றும் பிறஉடல் பாகங்களைப் பதப்படுத்துதல், தோல் பதனிடுதல், எண்ணெய், நிலக்கரி படுகை மீத்தேன், ஹைட்ரோ கார்பன் உள்ளடக்கிய இயற்கை எரிவாயுக்களைப் பிரித்தெடுப்பது, துளைப்பது மற்றும் கப்பல் உடைக்கும் தொழிற்சாலை என விவசாயத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் 8 வகையான தொழில்களை தொடங்க தடை விதிக்கப்படுகிறது.

அதே நேரத்தில் இச்சட்டம்நடைமுறைக்கு வந்த தேதிக்கு முன்பு செயல்பாட்டில் உள்ள திட்டங்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்று அறிவிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x