

‘நாங்கள் எந்த சங்கத்துக்கும் எதிரானவர்கள் அல்ல’ என கருத்து தெரிவித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், அதேநேரம் ஊடகத் துறையில் உள்ள கருப்பு ஆடுகள் களையெடுக்கப்பட்டு உண்மையான பத்திரிகையாளர் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே எங்களின் நோக்கம் என்று தெரிவித்துள்ளனர்.
சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற ஐஜி பொன்மாணிக்கவேல் மீது குற்றம்சாட்டி கொரட்டூரைச் சேர்ந்த ஒருவர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நிலுவையில் இருந்து வருகிறது.
இந்த வழக்கு விசாரணையின்போது மனுதாரரின் அடையாள அட்டையை வாங்கி பரிசோதித்த நீதிபதிகள், சிலை கடத்தல் வழக்கில் இடைநீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பி காதர் பாட்ஷாவின் அடையாள அட்டையும் அத்துடன் சேர்ந்து இருந்ததைக் கண்டு, மனுதாரருக்கும், டிஎஸ்பி காதர் பாட்ஷாவுக்கும் என்ன தொடர்பு என கேள்வி எழுப்பினர். மேலும் போலி பத்திரிகையாளர்கள் மற்றும் பத்திரிகையாளர் சங்கங்கள் குறித்தும் பல்வேறு கேள்விகளை எழுப்பி பதிலளிக்க உத்தரவிட்டு இருந்தனர்.
இந்த வழக்கு இதே அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இடையீட்டு மனுதாரரான செல்வராஜ் என்பவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ரிச்சர்ட்சன் வில்சன், சென்னை பிரஸ் கிளப் நிர்வாகம் குறித்தும், நிர்வாகிகள் குறித்தும் பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறினார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை பிரஸ் கிளப் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.ரமேஷ் வாதிட்டார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘‘நாங்கள் எந்த சங்கத்துக்கும் எதிரானவர்கள் அல்ல. ஊடகத் துறையில் உள்ள கருப்பு ஆடுகள் களையெடுக்கப்பட்டு, உண்மையான பத்திரிகையாளர்களின் நலன் காக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். அதேநேரம் பத்திரிகை துறையும் சுத்தமடைய வேண்டும்’’ என்று கருத்து தெரிவித்தனர்.
பின்னர் பிரதான வழக்கு விசாரணையை தள்ளிவைத்து, போலி பத்திரிகையாளர்கள் தொடர்பான வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள் ளனர்.