

ஒரே இரவில் 18 பேரிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை அண்ணா மேம்பாலம் அருகே இளைஞர் ஒருவர் நேற்று முன்தினம் இரவு செல்போனில் பேசியபடி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, ஒரே பைக்கில் வந்த இளைஞர்கள் 2 பேர் அவரிடமிருந்து செல்போனைப் பறித்துக் கொண்டு தப்பினர்.
அதிர்ச்சி அடைந்த இளைஞர் கூச்சலிட்டுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு திரண்ட அக்கம் பக்கத்தினர் செல்போன் திருடர்களை இருசக்கர வாகனங்களில் விரட்டியுள்ளனர். அப்போது மற்றொரு வாகனத்தின் மீது மோதி செல்போன் பறிப்பு கொள்ளையர்கள் விழுந்துள்ளனர். அதில் ஒருவர் தப்பிவிட்டார். மற்றொருவர் பொது மக்களிடம் சிக்கியுள்ளார். அவர் மீது தாக்குதல் நடத்தி அவரை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் பொதுமக்கள் ஒப்படைத்துள்ளனர்.
போலீஸாரின் விசாரணையில் பிடிபட்டவர் வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த பாலாஜி (22) என்பது தெரியவந்துள்ளது. அவரிடமிருந்து 18 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் இரவு மணலியில் இருந்து செல்போன் பறிப்பில் பாலாஜி மற்றும் அவரது நண்பர் ஈடுபட்டு வந்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். தப்பியோடிய இளைஞரை போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.