

தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளியை,மற்றொரு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது, மருத்துவமனைகளில் ஆம்புலன்ஸ் காத்திருக்க வேண்டி உள்ளது. இதனால், அவசர நேரத்தில்ஆம்புலன்ஸ் அனுப்புவதில் தாமதம் ஏற்படுகிறது.
இதை தவிர்க்கும் வகையில் 108 சேவைக்கு இணையாக, அரசு மருத்துவமனையில் இருந்து மற்றொரு மருத்துவமனைக்கு நோயாளியை அழைத்து செல்வதற்காக மட்டும் பிரத்யேக ஆம்புலன்ஸ் சேவையை தமிழக சுகாதாரத் துறை விரைவில் தொடங்க உள்ளது.
இதுபற்றி சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளியை, உயர் சிகிச்சைக்காக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது 108 ஆம்புலன்ஸ் சேவை பயன்படுத்தப்படுகிறது. இந்த இடைப்பட்ட நேரத்தில் மருத்துவமனைகளிலேயே ஆம்புலன்ஸ் வாகனம் சில மணி நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது. இதை தவிர்க்க இந்த புதிய ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட உள்ளது. இந்த புதிய சேவைக்கு 60 வாகனங்கள் கொள்முதல் செய்யும் பணி நடந்து வருகிறது.
இந்த சேவையை முதல்வர் பழனிசாமி விரைவில் தொடங்கி வைக்க உள்ளார்’’ என்றனர்.