

நீ்ர்நிலைகளில் உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து, மார்ச் 9-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் கோடீஸ்வரி என்பவர் உயர் நீதிமன்றத்தில் இதுதொடர்பாக தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளில் அடிக்கடி உயிரிழப்பு சம்பவங்கள் ஏற்படுகின்றன. கடற்கரைகள், சுற்றுலா தலங்கள், கோயில் குளங்கள், அருவிகள், குளங்கள் மற்றும் ஏரிகளில் உயிரிழப்பு சம்பவங்களைத் தடுக்க உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’’ என கோரியிருந்தார்.
இதுதொடர்பாக அறநிலையத் துறை தாக்கல் செய்திருந்த அறிக்கையில், ‘‘கோயில்களில் உள்ள தெப்பக்குளங்களில் பக்தர்கள் யாரும் உள்ளே சென்று குளிக்க முடியாதபடி இரும்புக்கம்பிகள் போட்டு தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன’’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதைத் தொடர்ந்து, நீர்நிலைகளில் ஏற்படும் உயிரிழப்பு சம்பவங்களைத் தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை என்ன என்பது குறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு, நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று நடந்தது.
அப்போது, மாவட்ட ஆட்சியர்கள் அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் அளிக்க வேண்டும் என அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதையடுத்துநீதிபதிகள், நீர்நிலைகளில் ஏற்படும் உயிரிழப்பு சம்பவங்களைத் தடுக்க எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் தனித்தனியாக வரும் மார்ச் 9-க்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அறிக்கை தாக்கல் செய்யாத மாவட்ட ஆட்சியர்கள் அன்றைய தினம் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 9-க்கு தள்ளிவைத்துள்ளனர்.