சாலைப் பணிகளை விரைந்து முடிக்க ஒற்றைச் சாளர முறை: தலைமைச் செயலருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் 

சாலைப் பணிகளை விரைந்து முடிக்க ஒற்றைச் சாளர முறை: தலைமைச் செயலருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் 
Updated on
1 min read

தேசிய நெடுஞ்சாலைகளில் சாலைப் பணிகள் விரைவாக நடக்க ஒற்றைச் சாளர முறை வேண்டும் என மத்திய அரசு கேட்டது. அதுகுறித்து பதிலளிக்க தலைமைச் செயலருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையை அடுத்த மதுரவாயல் முதல் வாலாஜா வரையிலான தேசிய நெடுஞ்சாலை முறையாக பராமரிக்கப்படவில்லை என்ற கடிதத்தின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து பொது நல வழக்காக விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன் மற்றும் ஆர்.ஹேமலதா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது, அப்போது சாலைப் பணிகள் குறித்து மத்திய அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில், காரைப்பேட்டை முதல் வாலாஜா வரை 36 கிலோ மீட்டருக்கு சாலை அமைப்பதற்காக 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை 31 சதவீதப் பணிகள் நிறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதிகள், பணியில் ஏன் காலதாமதம் என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த மத்திய அரசுத் தரப்பு வழக்கறிஞர், ''மாநில அரசின் பல்வேறு துறைகளிடம் ஒப்புதல் பெற வேண்டியுள்ளதால் இந்தத் தாமதம் ஏற்பட்டது. அனைத்து ஒப்புதல்களையும் எளிதில் வழங்கும் வகையில் ஒற்றைச் சாளர முறையை அமல்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்'' எனக் கோரிக்கை வைத்தார்.

தேசிய நெடுஞ்சாலை ஆணையத் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்குவதற்கு ஒற்றைச் சாளர முறையை உருவாக்குவதற்கான தக்க தருணம் இது என்று ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இது தொடர்பாக பதிலளிக்க தமிழக தலைமைச் செயலாளரை எதிர்மனுதாரராகச் சேர்த்து உத்தரவிட்டனர்.

சாலைகளை அமைக்கும்போது, ‘இந்திய சாலை தர காங்கிரஸ்’ அமைப்பின் விதிகளைப் பின்பற்றி, சாலைகளை அமைக்க வேண்டும் என அறிவுறுத்தினர். மோசமான சாலைகள் காரணமாக விபத்து ஏதும் நேர்ந்தால் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்குவதற்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தைப் பொறுப்பாக்க வேண்டிவரும் என எச்சரித்து, வழக்கு விசாரணையை ஏப்ரல் 8-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in