Published : 24 Feb 2020 07:49 PM
Last Updated : 24 Feb 2020 07:49 PM

கிரீமிலேயரால் ஓபிசி ஏழைகளுக்கு நன்மையா?- ராமதாஸ் பதில் 

கிரீமிலேயர் இன்னும் கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டால்கூட அதனால் கிரீமிலேயராக முத்திரை குத்தப்பட்டவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுமே தவிர, அவர்களை விட குறைவாக மதிப்பெண் பெற்ற கிரீமிலேயர் அல்லாதவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

கிரீமிலேயர் வரம்பைக் கணக்கிடுவதில் ஓபிசி பிரிவினரின் ஊதியத்தையும் வருவாய்க் கணக்கில் சேர்ப்பது சமூக அநீதி என, பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார். கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பிற பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் கிரீமிலேயர் முறையை ஒழிப்பதற்கான அரசியல் சட்டத் திருத்தங்களை மத்திய அரசு உடனடியாக எடுக்க வேண்டும் என்றும் அவர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

இந்நிலையில் இட ஒதுக்கீட்டின் முக்கிய அம்சங்கள் குறித்து தன் முகநூல் பக்கத்தில் சமூக நீதி- சில வினாக்களும், விளக்கங்களும் பகுதியில் ராமதாஸ் தொடர்ந்து எழுதி வருகிறார்.

கிரீமிலேயரால் ஓபிசி ஏழைகளுக்கு நன்மையா? என்பது குறித்து இன்று அவர் வெளியிட்ட முகநூல் பதிவு:

''மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டில் கிரீமிலேயர் முறை கடைப்பிடிக்கப்படுவதால், அந்த வகுப்பைச் சேர்ந்த ஏழைகளுக்கு நன்மை கிடைப்பதாகவும், கிரீமிலேயர் முறை இன்னும் கடுமையாக நடைமுறைப்படுத்தி பணக்காரர்கள் விலக்கப்பட்டால்தான் ஓபிசி இட ஒதுக்கீட்டின் பயன்களை பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஏழைக் குடும்பங்கள் பயனடைவர் என்றும் அண்மைக்காலமாக சில வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.

இது மிகவும் அபத்தமான வாதம் ஆகும்.

முதலில் இட ஒதுக்கீட்டுக்கு கிரீமிலேயர் என்ற பொருளாதார அளவுகோல் பொருந்தாது. சமூக அடிப்படையில் ஒடுக்கப்பட்டவர்கள் என்பதற்காகவே இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஒருவரிடம் பொருளாதார வலிமை இருப்பதால் அவரது சமூக நிலை உயர்ந்ததாகி விடாது. அதனால் தான் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு என்ற தத்துவம் ஏற்கப்படுவதில்லை. சுருக்கமாக கூறினால். இட ஒதுக்கீடு வறுமை ஒழிப்பு திட்டம் இல்லை... அது சமூக நீதி.

கிரீமிலேயர் இன்னும் கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டால்கூட அதனால் கிரீமிலேயராக முத்திரை குத்தப்பட்டவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுமே தவிர, அவர்களை விட குறைவாக மதிப்பெண் பெற்ற கிரீமிலேயர் அல்லாதவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காது. அந்த இடங்களுக்குத் தகுதியானவர்கள் இல்லை என்று கூறி அவை காலியாக வைக்கப்படும். பின்னர் அந்த இடங்கள் கொல்லைப்புறம் வழியாக உயர் சாதியினரால் நிரப்பப்படும்.

பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு 1993ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்த போதிலும் இன்று வரை மத்திய அரசு பணியில் உள்ள பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் எண்ணிக்கை 10 விழுக்காட்டைக் கூட தாண்ட வில்லை. மொத்தத்தில் கிரீமிலேயர் என்பது பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு கிடைப்பதை தடுப்பதற்கான ஒரு தந்திரம் ஆகும்.

எனவே, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% இட ஒதுக்கீட்டை அச்சமுதாயம் முழுமையாக அனுபவிக்க வேண்டுமானால் கிரீமிலேயர் முறை முற்றிலுமாக அகற்றப்பட வேண்டும்''.

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x