கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலையில் தேர்த்திருவிழா: தமிழக, கர்நாடக பக்தர்கள் திரண்டு சுவாமி தரிசனம்
தமிழகத்தின் எல்லையை அடுத்துள்ள கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலையில், சிவராத்திரியை ஒட்டி தேர்த்திருவிழா இன்று நடந்தது.
மாதேஸ்வரன் மலையில் உள்ள மாதேஸ்வர சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் சிவராத்திரி உற்சவம் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். சிவராத்திரியை அடுத்த மூன்றாம் நாளில் தேர்த்திருவிழா நடைபெறும் .
இந்நிலையில் மாதேஸ்வரன் மலையில் கடந்த இரு நாட்களாக சிவராத்திரி உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. உற்சவத்தின் மூன்றாம் நாளான இன்று, மாதேஸ்வரன் மலையில் தேர்த்திருவிழா நடைபெற்றது. இதில் மாதேஸ்வர சுவாமி அலங்கரிக்கப்பட்ட தேரில் உலா வந்தார்.
இதனைக் காண்பதற்காக, கர்நாடக மாநிலத்தில் இருந்து மட்டும் அல்லாமல் சேலம், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் உள்ளிட்ட தமிழக மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் லட்சத்துக்கும் மேற்பட்டோர் மாதேஸ்வரன் மலையில் குவிந்திருந்தனர். திருத்தேரில் உலா வந்த சுவாமியை பக்தர்கள் மனம் உருக தரிசித்தனர்.
மாதேஸ்வர மலை தேரோட்டத்தையொட்டி தமிழகத்தில் இருந்து சேலம் தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
