காவிரி டெல்டாவைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திருப்பது ஏமாற்று வேலை: டிடிவி தினகரன் கருத்து

காவிரி டெல்டாவைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திருப்பது ஏமாற்று வேலை: டிடிவி தினகரன் கருத்து
Updated on
1 min read

ஹைட்ரோ கார்பன் திட்டங்களை ரத்து செய்யாமல் காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திருப்பது ஏமாற்று வேலை என்று அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

பாளையங்கோட்டையில் பார்வையற்றோர் பள்ளியில் ஜெயலலிதா பிறந்தநாளை ஒட்டி அங்குள்ள மாணவ, மாணவியருக்கு மதிய உணவை அவர் வழங்கினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

காவிரி டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கான பூர்வாங்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இத் திட்டங்களை ரத்து செய்யக்கோரி அங்கு விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

அதேநேரத்தில் டெல்டா மாவட்டங்களை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக முதல்வர் அறிவித்திருப்பது மக்களை ஏமாற்றும் செயலாகும்.

அங்கு இந்தியன் ஆயில் நிறுவனம் செயல்படுத்தும் ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் ரத்து செய்யப்படுமா என்பது முதல்வர் தெளிவுபடுத்த வேண்டும். டெல்டா மாவட்டங்களில் விவசாயம் மற்றும் அது தொடர்பான தொழில்கள் தவிரவேறு ஏதுவும் தொடங்கக் கூடாது என்று முதல்வர் உறுதி அளிப்பாரா.

இளைஞர்களின் முன்னேற்றத்துக்கான எந்தத் திட்டத்தையும் தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கவில்லை.

கூவம், அடையாறு பகுதிகளை சுத்தப்படுத்த ஏற்கெனவே ஒதுக்கிய நிதி என்னவாயிற்று? தற்போது புதிதாக நிதி ஒதுக்கீடு செய்துள்ளனர்.

குடிமராமத்துப் பணிகளை சரிவர மேற்கொள்ளாமல் அரசு கஜானாவை தூர்வாரியிருக்கிறது. எம்எல்ஏக்களை பாதுகாத்து ஆட்சியை தக்கவைத்துக்கொண்டு சாதனை என்று சொல்கிறார்கள்.

மத்திய அரசின் தயவில் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னரே இந்த ஆட்சி காணாமல்போகும். ஜெயலலிதா ஆட்சியை அமைப்பதே அமமுகவின் நோக்கமாகும். வரும் சட்டப்பேரவை தேர்தலைக் கணக்கில் கொண்டே கண்துடைப்பு வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in