சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் மேலும் 3 பேர் உயிரிழப்பு: பலி எண்ணிக்கை 6-ஆக அதிகரிப்பு

சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் மேலும் 3 பேர் உயிரிழப்பு: பலி எண்ணிக்கை 6-ஆக அதிகரிப்பு
Updated on
1 min read

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் கடந்த 19-ம் தேதி ஏற்பட்ட வெடி விபத்தில் இன்று மேலும் 3 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பலி எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சின்னகாமன்பட்டியை சேர்ந்தவர் பிரபாகரன் (50). இவருச் சொந்தமான பட்டாசு ஆலையை அதே பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவருக்கு ஒப்பந்த அடிப்படையில் பட்டாசு தயாரிக்கக் கொடுத்துள்ளார்.

மாவட்ட வருவாய் அலுவலர் உரிமம் பெற்ற இந்த ஆலையில் 7 அறைகளில் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்தன.

கடந்த 19-ம் தேதி காலையும் வழக்கம்போல் பட்டாசு தயாரிக்கும் தொழிலில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது, ஓர் அறையில் பட்டாசுகளை அடுக்கியபோது உராய்வு ஏற்பட்டு திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. அதையடுத்து, தீப்பொறி விழுந்து அடுத்தடுத்து இருந்த 3 அறைகளும் வெடித்துச் சிதறின.

இந்த விபத்தில், சின்னகாமன்பட்டியை சேர்ந்த பெருமாள் என்பவரது மகன் கார்த்திக் (16), மீனம்பட்டியை சேர்ந்த பாண்டியராஜ் (28), வெள்ளைச்சாமி (60) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைபெற்றுவந்த சின்னகாமன்பட்டியைச் சேர்ந்த உதயகுமார் (42), மேட்டமலையைச் சேர்ந்த முத்துலட்சுமி (38), வள்ளியம்மாள் (50) ஆகியோர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், இவ்விபத்தில் பலியான கார்த்திக் குழந்தைத் தொழிலாளி என்பதால் அவரை வேலைக்கு அமர்த்திய குற்றத்திற்காக குழந்தைத் தொழிலாளர் தடுப்புச் சட்டத்தின் கீழும் பட்டாசு ஆலை நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in