

ராமநாதபுரம் மாவட்டத்தில் போகலூர், ராமேசுவரம், திருப்புல்லாணி, சேதுக்கரை ஆகிய இடங்களில் செயல்படும் சுங்கச் சாவடிகளை அப்புறப்படுத்த வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் கூட்டத்தில் சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் மனு அளித்தனர்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் திங்கட்கிழமை ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் தலைமையில் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் ராமநாதபுரம் மாவட்ட சுற்றுலா கார் வேன் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் நலச்சங்கத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் அளித்த மனுவின் விவரம் வருமாறு:
மதுரை - ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் மதுரை பரமக்குடி வரையிலும் மட்டுமே நான்கு வழிச்சாலை உள்ளது. பரமக்குடியிலிருந்து ராமேசுவரம் வரையிலும் உள்ள இருவழிச்சாலையில் போகலூரில் சுங்கச்சாவடி அமைத்து நான்கு வழிச்சாலையில் வசூல் செய்ய வேண்டிய சுங்கக் கட்டணத்தை வசூல் செய்து வருகிறார்கள். ஆம்புலன்ஸ் வாகனங்களில் அவசர சிகிச்சைக்காக செல்ல வேண்டிய நிலைகளில் இந்த போகலூர் சுங்கச்சாவடியில் போதிய இடவசதி இல்லாததால் காலதாமதம் ஏற்படுவதுடன் நோயாளி உயிர் இழப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது.
மேலும் சுற்றுலா மற்றும் ஆன்மிக தலங்களான ராமேசுவரம், திருப்புல்லாணி, சேதுக்கரை ஆகிய இடங்களில் வாகன நுழைவுக் கட்டணமும் நான்கு வழிச்சாலைகளில் வசூலிக்கும் தொகையை விட அதிகளவில் ரவுடிகளை வைத்த வசூல் செய்து வருகிறார்கள். இதனால் சுற்றுலாவாசிகளும், ஆன்மிக பக்தர்களும் பொது மக்களும் பெரிதும் பாதிப்படைகின்றனர்.
இதனால் இந்த நான்கு இடங்களில் செயல்படும் சுங்கச் சாவடிகளை அப்புறப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.
-எஸ். முஹம்மது ராஃபி