

"அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வருகை அருமையான விஷயம். இரு தலைவர்கள் சந்திப்பு வரவேற்கத்தக்கது" என தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் பேட்டியளித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், "ஒரு மிகப் பெரிய ஜனநாயக நாடான அமெரிக்காவிலிருந்து அதிபர் டிரம்ப் இந்தியா வந்துள்ளது அருமையான விஷயம். இந்தியாவின் வளர்ச்சிக்காக இரு நாட்டுத் தலைவர்களும் சந்திப்பது வரவேற்கத்தக்கது" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இந்தியாவில் வசிக்கின்ற இஸ்லாமியர்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் வராது என்று பிரதமரும், தமிழக முதல்வரும் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள்.
அப்படி இருந்தும் இஸ்லாமிய சகோதர சகோதரிகளை அரசியல் காரணத்துக்காக தவறான பாதைக்குக் கொண்டு செல்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
ஸ்டாலினுக்கு ஏதோ மனோ வியாதி என நினைக்கிறேன். அதனால்தான், எதை எடுத்தாலும் குறை கூறுகிறார்" என்று விமர்சித்தார்.
மேலும், பெண் குழந்தைகளுக்காக தொட்டில் குழந்தை திட்டத்தைக் கொண்டு வந்தார் 'அம்மா'. அவரது பிறந்தநாளை கவுரவிக்கும் வண்ணம், அன்றைய தினத்தை பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக முதல்வர் அறிவித்துள்ளது சிறப்பானது எனப் பேசினார்.