Last Updated : 24 Feb, 2020 02:36 PM

 

Published : 24 Feb 2020 02:36 PM
Last Updated : 24 Feb 2020 02:36 PM

புதுச்சேரி பல்கலை. கட்டண உயர்வு: குடியரசு துணைத் தலைவர் வரும் சூழலில் மாணவர் போராட்டம் தீவிரம்

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க நாளை மறுநாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வருகிறார். இதனை முன்னிட்டு 26 கார்கள் அணிவகுத்து மாதிரி ஒத்திகை நடைபெற்றது. அதே நேரத்தில் பல்கலைக்கழகத்தில் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வலியுறுத்தி பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாக நகரிலுள்ள கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு நாளை மறுநாள் (பிப்.26) புதுச்சேரி வருகிறார். தனி ஹெலிகாப்டரில் புதுச்சேரி வரும் அவர், கார் மூலம் கிழக்குக் கடற்கரை சாலை வழியாக பல்கலைக்கழகம் செல்கிறார். காலை 10.30 மணிக்கு புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார். அதையடுத்து, 11.30 மணிக்கு மீண்டும் அதே ஹெலிகாப்டரில் புறப்படுகிறார்.

வெங்கய்ய நாயுடுவின் வருகையையொட்டி, புதுச்சேரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரித்துள்ளன. இந்த நிலையில், அவரது வருகையின்போது அவருக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு தொடர்பாக இன்று (பிப்.24) மாதிரி ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

புதுச்சேரி விமான நிலையத்தில் வெங்கய்ய நாயுடு வந்து இறங்கியதும், அவரைப் பாதுகாப்புடன் பல்கலைக்கழக விழா இடத்திற்கு அழைத்துச் செல்வது போல ஒத்திகை செய்யப்பட்டது. அவர் செல்லும் சாலைகளில் தடுப்புக் கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன. 26 கார்கள் அணிவகுத்து, கிழக்கு கடற்கரை சாலை வழியாக சிவாஜி சிலை, கோட்டக்குப்பம் பகுதியில் சென்றது. அந்த வழியாக செல்லும் போக்குவரத்தை நிறுத்துவது, பொதுமக்களை அறிவுறுத்துவது போன்ற பணியில் போக்குவரத்து போலீஸார் ஈடுபட்டனர். டிஜிபி பாலாஜி ஸ்ரீவச்தவா தலைமையில் நடைபெற்ற மாதிரி ஒத்திகை நிகழ்ச்சியில் முதுநிலை காவல் கண்காணிப்பாளர்கள் உள்பட அனைத்துப் பிரிவு காவலர்களும் பங்கேற்றனர்.

நகரெங்கும் போராட்டம்

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகக் கட்டண உயர்வை வாபஸ் பெறக் கோரி பல்கலைக்கழக மாணவர்கள் இரண்டு வாரங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டம் தொடர்பாக ஆளுங்கட்சியிலுள்ள காங்கிரஸ்-திமுக, எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் ஆகியவை இதுவரை எவ்விதக் கருத்தையும் தெரிவிக்கவில்லை என மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகக் கட்டண உயர்வைக் கண்டித்து புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் மாணவர் நடத்தி வரும் போராட்டத்தை ஆதரித்து இன்று புதுச்சேரி முழுவதும் மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி புதுச்சேரி அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் அண்ணாசாலையில் இருந்து ஊர்வலமாக வந்து காமராஜர் சிலை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு வந்த பெரியகடை போலீஸார், மறியலில் ஈடுபட்ட மாணவர்களைக் கலைந்து போகச் செய்தனர். உயர்த்தப்பட்டக் கல்வி கட்டணத்தை வாபஸ் பெறும் வரை போராட்டம் தொடரும் என்று மாணவர்கள் தெரிவித்தனர்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி நாளை கருப்புக் கொடி போராட்டம் நடத்தப்படும் என்று மாணவர் அமைப்பினர் தெரிவித்தனர்.

பல்கலைக்கழக தரப்பில் கூறுகையில், "புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு கல்விக் கட்டணம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. மாணவர் மன்றம் கட்டண உயர்வைக் குறைக்கக் கோரினர். சில படிப்புகளில் கட்டண உயர்வை 25 சதவீதம் குறைத்து அறிவித்தோம்.

அதையடுத்து இரு செமஸ்டர்களில் குறைக்கப்பட்ட கட்டணத்தைச் செலுத்தினர். மீண்டும் இப்பிரச்சினையை கையில் எடுத்துள்ள மாணவர் பேரவை, நூறு சதவீதம் கட்டண உயர்வைத் திரும்பப் பெறக் கோருகின்றனர். நூலகம், கணினி ஆய்வகங்கள், மின்சாரம், எரிபொருள், மென்பொருள் சந்தா என வளர்ந்து வரும் செலவினங்களைச் சமாளிக்கவே இந்தக் கல்விக் கட்டண உயர்வை அறிவித்துள்ளோம்" என்று கட்டண உயர்வைத் திரும்பப் பெற சாத்தியமில்லை என்பதைத் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x