Last Updated : 24 Feb, 2020 01:04 PM

 

Published : 24 Feb 2020 01:04 PM
Last Updated : 24 Feb 2020 01:04 PM

'அங்கன்வாடி பணி தாருங்கள்; இல்லையேல் மகன் கருணைக் கொலைக்காவது அனுமதியுங்கள்': விருதுநகர் ஆட்சியரிடம் கண்ணீர் மல்க தாய் மனு

மூளை வளர்ச்சி குன்றிய தனது மகனை கருணைக் கொலை செய்யக்கோரி, விருதுநகரில் இன்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலரிடம் தாய் ஒருவர் மனு கொடுத்தார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி, ரிசர்வ் லைனில் வசிக்கிறார் பாண்டி தேவி. இவர் இன்று மாவட்ட வருவாய் அலுவலரிடம் அளித்த மனுவில், "கணவரை இழந்துவிட்ட என்னால் தனியாக 9-ம் வகுப்பு படிக்கும் மகளையும், மூளை வளர்ச்சி குன்றிய மகனையும் பராமரிக்க முடியவில்லை. எனது நிலையை எடுத்துச் சொல்லி அங்கன்வாடி ஊழியராகப் பணி கோரி விண்ணப்பித்தும் பயனில்லை. எனது மகனை கருணைக் கொலை செய்ய உத்தரவிட வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தனது மகனையும் இடுப்பில் தூக்கி வந்திருந்தவர் அச்சிறுவனை தரையில் விரித்துப் படுக்க வைத்துவிட்டு மனுவோடு காத்திருந்த நிலை காண்போரைக் கலங்கச் செய்தது.

உறவுகள் உதவவில்லை..

பாண்டிதேவியின் கணவர் சில மாதங்களுக்கு முன்னர் தான் கட்டிட வேலை பார்க்கும்போது கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து இறந்தார். மேலும், பாண்டிதேவியின் சகோதரரும், தந்தையும் இறந்துவிட்டனர். இதனால், உறவுகளின் உதவி அவருக்கு இல்லை.

இந்நிலையில்தான், தனியாக வசிக்கும் அவர் குடும்பத்தை நடத்த கஷ்டப்படுவதாகத் தெரிவித்து அங்கன்வாடி வேலை வழங்க வேண்டியுள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் அங்கன்வாடிகளில் காலியாக உள்ள 184 பணியிடங்களுக்கு நேர்காணல் ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட ஊராட்சி அலுவலகங்களில் நடைபெற்று வருகிறது. கணவரால் கைவிடப்பட்டப் பெண்கள், விதவைப் பெண்களுக்கு தகுதி மற்றும் முன்னுரிமை அடிப்படையில் வேலை வழங்க ஏற்பாடு நடந்து வருகிறது.

கணவரை இழந்த பாண்டிதேவி என்ற இளம்பெண் தனது மூளை வளர்ச்சிக் குன்றிய மகனைச் சுமந்தவாறு நேற்று வேலை கோரி விண்ணப்பித்தார். அதனை பரிசீலித்து வருவதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.

இந்நிலையில், தொடர்ந்து இன்று மகனைக் கருணைக் கொலை செய்ய மனு கொடுத்து கண்ணீர் மல்க அரசு உதவிக்கரத்துக்காக காத்திருக்கிறார். அங்கன்வாடி வேலை கிடைத்தால் கல்வியைத் தொடர விரும்பும் தனது மகளையும், மூளை வளர்ச்சி இல்லாத மகனையும் காப்பாற்றி விடுவேன் எனக் கூறுகிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x