சென்னை 376-வது ஆண்டு: சிறப்பு தபால் உறை வெளியீடு

சென்னை 376-வது ஆண்டு: சிறப்பு தபால் உறை வெளியீடு
Updated on
1 min read

சென்னையின் 376-வது ஆண்டையொட்டி நாணயங்களின் சிறப்பை உணர்த்தும் வகையில் சிறப்பு தபால் உறை நேற்று வெளியிடப்பட்டது.

‘மெட்ராஸ் ஹெரிடேஜ் லவ்வர்ஸ் ஃபோரம்’ மற்றும் தொல்லியல் துறை சார்பில் சென்னையின் 376-வது ஆண்டையொட்டி சிறப்பு தபால் உறை வெளியீட்டு விழா, கோட்டை அருங்காட்சியகத்தில் நேற்று நடந்தது. சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சென்னை மண்டல அஞ்சல்துறை தலைவர் மெர்வின் அலெக்சாண்டர், சிறப்பு தபால் உறையை வெளியிட்டார். கோட்டை அருங்காட்சியகத்தின் உள்பகுதியில் சென்னையின் தோற்றம், வளர்ச்சி குறித்து விளக்கும் வகையில் புகைப்பட கண்காட்சி அமைக்கப் பட்டுள்ளது.

மெர்வின் அலெக்சாண்டர் பேசும்போது, ‘‘ஒவ்வொரு ஆண்டும் சென்னை மாநகரின் தினத்தையொட்டி சிறப்பு தபால் உறை வெளியிடப்பட்டு வருகிறது. கடந்த 7 ஆண்டுகளாக சிறப்பு தபால் உறைகளை வெளியிட்டுள்ளோம். அந்த வகையில் சென்னையின் பாரம்பரியத்தை உணர்த்தும் வகையிலும் பழைய நாண யங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையிலும் இந்த ஆண்டில் சிறப்பு தபால் உறை வெளியிட்டுள்ளோம். வரும் ஆண்டுகளிலும் தொடர்ந்து சிறப்பு தபால் உறைகள் வெளியிடப்படும்’’ என்றார்.

மெட்ராஸ் ஹெரிடேஜ் லவ்வர்ஸ் ஃபோரம் நிறுவனர் டி.ஹேம்சந்திரா ராவ் மற்றும் தொழிலதிபர் நல்லி குப்புசாமி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். விழாவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in