

அதிமுக ஆட்சியில் மக்களுக்கான எந்த திட்டங்களையும் கொண்டு வரவில்லை என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
முன்னாள் அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தலைமையில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் திமுகவில்இணையும் விழா மதுரை ஒத்தக்கடையில் நேற்று மாலை நடைபெற்றது. மதுரை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் பி.மூர்த்தி வரவேற்றார்.
மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மு.மணிமாறன், மதுரை மாநகர் மாவட்டப் பொறுப்பாளர் கோ.தளபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, மாநில துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி, முன்னாள் அமைச்சர்கள்கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
தமிழகத்தில் நிதிநிலை கவலைக்கிடமாக இருக்கிறது. ஏற்கெனவே 8.1 சதவீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி தற்போது 7.2 சதவீதமாக வீழ்ச்சி அடைந்திருக்கிறது. 2011-ல் திமுக ஆட்சியில் கடனாக ரூ.1 லட்சம் கோடி இருந்தது. இவர்களது 10 ஆண்டு கால ஆட்சியில் ரூ.4.56 லட்சம் கோடி கடனாக உயர்ந்திருக்கிறது.
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை
இவர்களது ஆட்சியில் மக்களுக்கான எந்த திட்டங்களையும் கொண்டு வரவில்லை. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஆட்சியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக அறிவித்ததற்கும், கொண்டாடுவதற்கும் என்ன அருகதை இருக்கிறது.
முதல்வர் பழனிசாமி சில அவதாரங்கள் எடுத்துள்ளார். அதில் விவசாயி அவதாரமும் ஒன்று. எத்தனை அவதாரம்எடுத்தாலும் விவசாயிகள் யாரும் அவரைஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.
பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலம் என அறிவித்து அப்பகுதி விவசாயிகளை ஏமாற்றி வருகின்றனர். வேளாண் மண்டலம் என்றால் வேளாண் திட்டங்கள் தவிர வேறு திட்டங்கள் இருக்கக் கூடாது. ஆனால் அங்கு ஹைட்ரோ கார்பன் உட்பட 400-க்கும் மேற்பட்ட திட்டங்கள் இருக்கும்போது எப்படி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிறைவாக மதுரை கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் ரகுபதி நன்றி கூறினார்.