

சென்னை அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில் ரூ.4 ஆயிரத்துக்கு ‘அம்மா பிளாட்டினம் பிளஸ் பரிசோதனை’ ஓரிருவாரத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளது என்று மருத்துவமனையின் தொடர்பு அதிகாரி டாக்டர் ஆனந்த்குமார் தெரிவித்தார்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் ரூ.4.5 கோடி மதிப்பில் ‘அம்மா முழு உடல் பரிசோதனை மையம்’ கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. உயர் தொழில்நுட்ப மருத்துவ சாதனங்கள், ஆய்வக வசதிகளுடன் கூடிய மையத்தில் ரூ.1,000-க்கு ‘அம்மா கோல்டு முழு உடல் பரிசோதனை’, ரூ.2 ஆயிரத்துக்கு ‘அம்மா டைமண்ட் முழு உடல் பரிசோதனை’, ரூ.3 ஆயிரத்துக்கு ‘அம்மா பிளாட்டினம் முழு உடல் பரிசோதனை’ செய்யப்படுகிறது. இதில், முழுமையான ரத்தப் பரிசோதனைகள், சிறுநீரகம், ரத்தக் கொழுப்பு, கல்லீரல், இசிஜி, அல்ட்ரா சவுண்ட், தைராய்டு, ரத்தசர்க்கரை, ரத்த அழுத்தம், எலும்புதிண்மம் என பல்வேறு வகையான பரிசோதனைகள் இடம்பெற்றுள்ளன. இதுவரை இந்த மையத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முழு உடல் பரிசோதனை செய்துள்ளனர்.
இந்நிலையில், புதிதாக ரூ.4 ஆயிரத்துக்கு ‘அம்மா பிளாட்டினம் பிளஸ்’ என்ற பரிசோதனை திட்டம் ஓரிரு வாரத்தில் தொடங்கப்பட உள்ளது. இதுதொடர்பாக மருத்துவமனை தொடர்பு அதிகாரி டாக்டர் ஆனந்த் குமார் கூறியதாவது:
அம்மா முழு உடல் பரிசோதனை மையத்தில் புதிதாக ரூ.4 ஆயிரத்துக்கு ‘அம்மா பிளாட்டினம் பிளஸ் பரிசோதனை திட்டம்’ ஓரிரு வாரத்தில் கொண்டு வரப்படுகிறது. இந்த புதிய திட்டத்தில் பார்வை பரிசோதனை, கண் அழுத்த நோய், பார்வை குறைபாடு கண்டறிதல், விழித்திரை ஆகிய பரிசோதனைகள், நுரையீரல் செயல்பாடு கண்டறிதல், இதய செயல்பாடு கண்டறியும் ‘திரெட் மில்’ பரிசோதனை ஆகியவை கூடுதலாக செய்யப்பட உள்ளன. இதற்காக ரூ.8 லட்சம் மதிப்பிலான மருத்துவ சாதனங்கள் கொள்முதல் செய்யப்பட்டு நிறுவப்பட்டு வருகின்றன.
இங்கு செய்யப்படும் முழு உடல் பரிசோதனைகளை தனியார்மருத்துவமனையில் செய்வதற்குகுறைந்தது ரூ.15 ஆயிரத்துக்குமேல் செலவாகும். ஆனால், இந்தமையத்தில் தனியார் மருத்துவமனைக்கு நிகராக அல்ல, அதற்கும் மேலாக அதிநவீன மருத்துவக் கருவிகளைக் கொண்டு,பரிசோதனைகள் செய்யப்படுகிறது.
பரிசோதனை முடிவுகளை பார்க்கும் டாக்டர்கள், தேவை இருந்தால் உரிய மேல்சிகிச்சைக்கு அறிவுறுத்துகின்றனர். பரிசோதனைக்கு வரும் பயனாளிகளுக்கு தரமான, சுகாதாரமான உணவு எவ்வித கட்டணமும் இல்லாமல் வழங்கப்பட்டு வருகிறது. 40 வயதைக் கடந்தவர்கள் நிச்சயமாக உடல் பரிசோதனை செய்து கொள்ளவேண்டும்.
இவ்வாறு டாக்டர் ஆனந்த்குமார் தெரிவித்தார்.