

புதுச்சேரி முதல்வரின் குற்றச்சாட்டு எதிரொலியாக திருவண்ணாமலையில் தொடர்ந்து நடைபெறும் கஞ்சா சோதனையில், நேற்று மட்டும் 4 பேரை போலீஸார் கைது செய்து, 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கடந்த 5 நாட்களில் 14,300 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் கடந்த 19-ம் தேதி நடைபெற்ற விழா ஒன்றில் பேசிய புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, “திருவண்ணாமலையில் இருந்து புதுச்சேரிக்கு ரயில் மூலம் கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்யப்படுகிறது. பெண் ஒருவர் தலைமையேற்று விற்பனை செய்கிறார். இது குறித்து தகவல் தெரிவித்தும் தமிழக காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை” என்றார்.
புதுச்சேரி முதல்வரின் பகிரங்க குற்றச்சாட்டு, தமிழக காவல்துறையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டது. கஞ்சா வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் துறைக்கு உயரதிகாரிகள் உத்தரவிட்டனர்.
நேற்று போலீஸார் நடத்திய சோதனையில், திருவண்ணாமலை சமுத்திரம் பகுதியைச் சேர்ந்த மாரிக்கண்ணு(45), செல்வகுமார்(40), அசோக்குமார்(47), அவரது மனைவி மங்கை(38) ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 4 பேரும் வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்துவந்தது தெரிந்தது. அவர்களிடம் இருந்து 3,800 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல், திருவண்ணாமலை சமுத்திரம் பகுதியைச் சேர்ந்த சேதுபதி வீட்டில் சோதனை நடத்தியபோது பதுக்கி வைத்திருந்த தலா 20 கிராம் எடை கொண்ட 101 பாக்கெட் கஞ்சாவை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். காவல் துறையினரை கண்டதும் தப்பியோடிய சேதுபதி(27) மற்றும் அவரது மனைவி தீபிகா ஆகியோரை தேடிவருகின்றனர். நேற்று ஒரு நாளில் 6 கிலோ கஞ்சா சிக்கியுள்ளது. கடந்த 5 நாட்களாக நடைபெற்ற சோதனையில் 10 பேர் கைது செய்யப்பட்டு, 14,300 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
போதை ஸ்டாம்ப் பறிமுதல்
சேலம் போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி திருநாவுக்கரசு, இன்ஸ்பெக்டர் அம்பிகா தலைமையிலான போலீஸார், சேலம் அடுத்த தீவட்டிப்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலை சோதனைச் சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்துக்கு இடமாக வந்த இரு இளைஞர்களை பிடித்து விசாரித்தபோது, அவர்களிடம் ‘ஸ்டாம்ப்’ வடிவிலான 20 வில்லைகள், 2.600 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.
விசாரணையில், சேலம் சின்னத்திருப்பதியைச் சேர்ந்த சரண் (22), ஓமலூரைச் சேர்ந்த கோகுல் (24) என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்த கஞ்சா உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த போலீஸார் இருவரையும் கைது செய்தனர்.