

பெட்ரோல் பங்க் தடையில்லாச் சான்றில் காவல் ஆணையரின் கையெழுத்தை போலியாக போட்டு மோசடி செய்த பெட்ரோல் பங்க் உரிமையாளர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.
சென்னை பெருநகரப் பகுதியில் பெட்ரோல் பங்க் தொடங்க வேண்டும் என்றால் முறைப்படி விண்ணப்பித்து, சென்னை காவல் ஆணையரிடம் அனுமதி பெற வேண்டும்.
தீயணைப்பு, போக்குவரத்து காவல் உள்ளிட்ட அதிகாரிகளிடம் விண்ணப்பித்து தனித்தனியாக தடையில்லாச் சான்று பெற்று, இறுதியாக காவல் ஆணையர் கையெழுத்திட்டு தடையில்லாச் சான்றை வழங்குவார்.
போலி அனுமதி கடிதம்
இந்த நிலையில், குன்றத்தூர், திருவொற்றியூர் பகுதிகளில் பெட்ரோல் பங்க் அமைக்க 2 பேருக்கு வழங்கப்பட்ட அனுமதிக் கடிதம் போலி என்று குற்றச்சாட்டு எழுந்தது. ஆர்.கே.நகரை சேர்ந்த பெட்ரோல் பங்க் உரிமையாளர் சிவக்குமார் (47) என்பவர் காவல் ஆணையர் போல கையெழுத்திட்டு மோசடி செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, அவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
இந்நிலையில், அவரையும், அவரது கூட்டாளி அகரம் ஜெயபிரகாஷையும் (49) குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இதுதவிர, பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட தம்பதியர் உட்பட மேலும் 6 பேர் குண்டர் தடுப்பு காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.