

காஞ்சிபுரம் பரந்தூர் அருகே அமைய உள்ள இரண்டாவது சர்வதேச விமான நிலையத்துக்காக 5 ஏரிகள் உட்பட 2000 ஏக்கர் விவசாய நிலங்கள், 2500 குடியிருப்புகள் கையகப்படுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதன் மூலம் வாழ்வாதாரத்தை இழக்கும் விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்களுக்கு மாற்றுத் தொழில் என்ன என்பது கேள்விக் குறியாக உள்ளது.
சென்னை மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்துக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. அங்கு மக்கள் நெருக்கத்தைக் கட்டுப்படுத்த 2-வது விமான நிலையத்தை அமைப்பதற்கான முயற்சிகள் பல ஆண்டுகளாக எடுக்கப்பட்டு வந்தன. ஸ்ரீபெரும்புதூர், மாமண்டூர், பரந்தூர் உட்பட பல்வேறு பகுதி களில் இடம் தேர்வுக்கான ஆய்வு கள் நடைபெற்று வந்தன.
இதில் விமானப் போக்குவரத்து ஆணையரகத்தால் பரந்தூர் பகுதி இறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்தப் பகுதியில் விமான நிலையம் அமைக்க அரசாணை வெளியிடுவதற்கு முன்பு ஆரம்பக் கட்டப் பணிகள் நடைபெற்று வருவதாக அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சமூக வலைதளங்களில் வரைபடம்
இந்த விமான நிலையம் அமைக்கப்படும் பகுதிகள் தொடர்பான வரைபடம் சில ரியல்எஸ்டேட் வணிகர்களிடம் இருந்துசமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இந்த வரைபடத்தின்படி விமான நிலையத்துக்காக 4,500 ஏக்கர் நிலங்கள் கையகப் படுத்தப்பட உள்ளன. இதில் அரசுப் புறம்போக்கு நிலங்கள், மேய்கால் புறம்போக்கு நிலங்கள் போக விவசாயிகளின் நிலங்கள், பொதுமக்களின் குடியிருப்புகள் என 2,000 ஏக்கர் அளவுக்கு கையகப் படுத்த வேண்டி இருக்கும். இவை தவிர நாகப்பட்டு ஏரி, ஏகனாபுரம் வயலேரி, ஏகனாபுரம் காலேரி, நெல்வாய் ஏரி, மகாதேவிமங்கலம் ஏரி ஆகிய 5 ஏரிகளையும் கையகப்படுத்தப்பட வேண்டி இருக்கும். பல ஏரிகள் சாலை, விரிவாக்கத்துக்கென பகுதி அளவுக்கு எடுக்கப்பட உள்ளது.
பரந்தூர், வளத்தூர், மடப்புரம், நெல்வாய், தண்டலம், ஏகனா புரம், நாகப்பட்டு உட்பட 10-க்கும் அதிகமான கிராமங்களில் இருந்து நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. ஏகனாபுரம், நாகப்பட்டு உள்ளிட்ட சில கிராமங்கள் முழுவதும் இந்த விமான நிலை யத்துக்காக எடுக்கப்படலாம் என்றும் இப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர் சுந்தர் கூறும்போது, "இந்தப் பகுதியில் பெரும்பாலும் விவசாயத்தையும், கால்நடை வளர்ப்பையும் நம்பி வாழும் மக்கள் அதிகம் உள்ளனர். 2-வது விமான நிலையம் வரவேற்கத்தக்கது என்றாலும், ஏழை, எளிய மக்களின் நிலங்களை கையகப்படுத்தி இந்தப் பகுதியில் விமான நிலையம் அமைப்பது சரியாக இருக்காது" என்றார்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலர் கே.நேருகூறும்போது, "இந்த விமான நிலையம் தொடர்பாக விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கூட கேள்வி எழுப்பினோம். இது தொடர்பாக ஏதும் தகவல் இல்லை என்பதுபோல் ஆட்சியர் சொல்கிறார். ஆனால் இந்த விமான நிலையத்தின் வரைபடம் அரசாணை வெளியிடுவதற்கு முன்பே ரியல் எஸ்டேட் வணிகர்களுக்குக் கிடைத்துள்ளது.
இது வெளியானது தொடர்பாக சில அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வரை படத்தைக் கொண்டு ரியல் எஸ்டேட் வணிகர்கள் விமான நிலையம் அமைய உள்ள இடத்துக்கு அருகில் உள்ள பகுதிகளை விலைக்கு வாங்க முயல்கின்றனர். அதேபோல் நிலங்கள் கணக்கெடுப்பு சார் ஆட்சியர் மூலம் ரகசியமாக நடைபெறுகிறது.
விவசாய நிலங்கள், குடியிருப்புகளை கையகப்படுத்தக் கூடாது. தவிர்க்க முடியாத சூழ்நிலையில் விவசாயிகளிடம் இருந்துகுறைந்த இடங்கள் கையகப்படுத்த நேர்ந்தாலும் நிலங்களைஇழப்பவர்களின் வாழ்வாதாரத் துக்கு வழி ஏற்படுத்த வேண்டும். இந்த விமான நிலையம் தொடர்பாக பொதுமக்கள் ரியல் எஸ்டேட் வணிகர்களிடம் ஏமாறுவதற்கு வாய்ப்புள்ளதால், இது தொடர்பான விவரங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்’’ என்றார்.