Published : 23 Feb 2020 10:43 AM
Last Updated : 23 Feb 2020 10:43 AM

‘கடவுளுக்கு ஒரு பங்கு தருவோம்’- முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொன்ன குட்டிக்கதை

கோப்புப் படம்.

திருச்செந்தூர்

திருச்செந்தூர் வீரபாண்டியன் பட்டணத்தில் டாக்டர் ப.சிவந்தி ஆதித்தனார் மணி மண்டபம் திறப்பு விழா நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தலில் தோல்வியடைந்த எதிர்க்கட்சிக்கு குட்டிக்கதை ஒன்று கூறினார்.

“நாங்கள் வாய்ச்சொல் வீரராக இல்லை, நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளிக்காமல், சாத்தியமான திட்டங்களை மட்டும் அறிவித்து வருகிறோம். இதைக் கூறும்போது எனக்கு ஒரு கதை நினைவுக்கு வருகிறது.

மூன்று பேர் சேர்ந்து ஒரு லாட்டரி சீட்டு வாங்கி, பரிசு விழுந்தால் கடவுளுக்கு சமபங்கு தருவோம் என்று முடிவு செய்தார்கள். அந்த லாட்டரி சீட்டுக்கு பரிசு விழுந்தது. பணத்தை வாங்குவதற்குமுன் மூன்று பேருக்கும் ஒரே சிந்தனை தோன்றியது. கடவுளுக்கு ஒரு பங்கு தருவோம் என்று சொன்னோமே, அப்படி தரக்கூடாது என்ற முடிவுதான் அது. அவசரப்பட்டு செய்த சத்தியத்தில் இருந்து எப்படி தப்புவது? என்ற சிந்தனையே ஓடிக்கொண்டிருந்தது.

முதல் நபர், ‘தரையில் ஒரு சிறிய வட்டம் வரைவோம், எல்லா பணத்தையும் நாணயங்களாக்கி மேல் நோக்கி எறிவோம். சின்ன வட்டத்துக்குள் விழுவது கடவுளுக்கு’ என்றான். இரண்டாவது நபர், ‘மிகப்பெரிய வட்டம் வரைவோம். நடுவில் நின்றுகொண்டு பணத்தை மேல் நோக்கி எறிவோம். அந்த வட்டத்துக்கு வெளியே எவ்வளவு பணம் விழுகிறதோ அது கடவுளுக்கு’ என்றான். 3-ம் நபர், ‘பணத்தை மேலே வீசி எறிவோம். மேலே நின்றுவிடுகின்ற பணம் கடவுளுக்கு, கீழே விழுகின்ற பணம் நமக்கு’ என்றான்.

இவர்களிடம் நற்குணம் இல்லாதது மட்டுமல்ல, கடவுளைவிட தாங்களே கெட்டிக்காரர்கள் என்ற ஆணவமும் இருந்தது. இவர்களைப் போன்ற சிலர், செய்ய முடியாதவற்றை எல்லாம் செய்வோம் என உண்மைக்கு மாறானவற்றை மக்களிடம் கூறி நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டனர்.

ஆனால் அவர்கள் இந்த மூன்று நபர்களைப்போல் சொன்னதை செய்யவில்லை. அதற்கு வேறு விளக்கங்கள் கொடுத்து வருகின்றனர். ஆனால், அவர்களை பற்றி நன்கு அறிந்துகொண்ட மக்கள், அவர்களுக்கு தக்க தண்டனையை சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல்கள் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களிலும் வழங்கினார்கள். இனிமேலும் இதனை தொடர்ந்து வழங்கிக்கொண்டே இருப்பார்கள் என நான் உறுதியாக கூறுகிறேன்” என்று பேசினார் முதல்வர் பழனிசாமி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x