Published : 23 Feb 2020 10:06 AM
Last Updated : 23 Feb 2020 10:06 AM

கிரிராஜ்சிங்கை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் : பிரதமர் மோடியிடம் வைகோ வலியுறுத்தல்

மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் மக்களிடையே வெறுப்பை வளர்க்கும் விதமாகத் தொடர்ந்து பேசி வருகிறார் எனவே அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வைகோ மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“நடுவண் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் கிரிராஜ் சிங், மக்களுக்கு இடையே வெறுப்பை விதைத்து, சமூக நல்லிணக்கத்தைக் கெடுக்கின்ற வகையில் தொடர்ந்து பேசி வருகின்றார்.

இஸ்லாமியர்கள் பயங்கரவாதிகள்; இஸ்லாமியர்களுக்கு வாழ்க்கை நெறிகளைப் போதிப்பதற்காக, 1867 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, இன்றுவரையிலும் சிறப்பாகச் செயல்பட்டு புகழ்பெற்ற தியோபாண்ட் கல்வி நிறுவனம், ஹபீஸ் சயீத் போன்ற தீவிரவாதிகளை உருவாக்கி வருகின்றது; தில்லி சகீன்பாக் போராட்டத்தில் ஈடுபடுகின்றவர்கள் தற்கொலைப்படைத் தீவிரவாதிகள் என்றெல்லாம் பேசியதற்காக, ஏற்கனவே பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களால் கண்டனத்திற்கு உள்ளாகி இருக்கின்றார்,

இவரைப் போன்றவர்களின் வெறிப்பேச்சுகளால்தான் தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் தோற்றோம் என அமித் ஷா கூறி இருக்கின்றார்.

கிரிராஜ் சிங், பாஜக தலைவர்களைப் பொருட்படுத்துவதே இல்லை என, அவர்களுடைய கூட்டணிக் கட்சியான லோக் ஜனசக்தி தலைவர் சிராக் பஸ்வான். பிகார் முன்னாள் முதல்வர் ஜித்தன்ராம் மாஞ்சி ஆகியோர் கண்டனம் தெரிவித்து இருக்கின்றார்கள்.

கிரிராஜ் சிங் கவனமாகவும் பொறுப்பாகவும் பேச வேண்டும் என, பாஜக தலைவர் நட்டா கூறிய ஒரு வார காலத்திற்குள், அதைக் கொஞ்சமும் பொருடபடுத்தாமல், மீண்டும் நச்சுக்கருத்துகளை விதைக்கின்றார்,

இந்திய விடுதலையின்போதே, முஸ்லிம்கள் அனைவரையும் பாகிஸ்தானுக்கு அனுப்பி இருக்க வேண்டும், அப்படிச் செய்யாததன் விளைவை, இன்று நாம் சந்தித்துக்கொண்டு இருக்கின்றோம் என்று பேசி இருக்கின்றார்.

இதுதான் பாரதிய ஜனதா கட்சியின் நிலைப்பாடா? என்பதை, அக்கட்சி தெளிவுபடுத்த வேண்டும்.

1947 க்கு முன்பு, இந்தியா என்ற நாடே கிடையாது. இது இந்துக்கள் நாடு என்று சொல்வதற்கும் இடம் இல்லை. இந்தியா என்ற நாட்டுக்கான அரசு அமைப்புச் சட்டத்தை ஆக்கித் தந்த நம் முன்னோர்கள், இது இந்துக்கள், இசுலாமியர்கள், கிறித்தவர்கள், பௌத்தர்கள், சமணர்கள், சீக்கியர்கள் என பல மதங்கள், பல்வேறு பண்பாடுகள் நிலவுகின்ற நாடு என்பதை தெளிவுபட வரையறுத்துக் கூறி இருக்கின்றார்கள்.

நடுவண் அமைச்சராகப் பொறுப்பு ஏற்றபோது, அரசு அமைப்புச் சட்டத்தின் மீது எடுத்துக் கொண்ட உறுதிமொழிக்கு எதிராகச் செயல்பட்டு வருகின்ற கிரிராஜ்
சிங்கை, நடுவண் அமைச்சர் பதவியில் இருந்து, பிரதமர் நரேந்திர மோடி நீக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x