

ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்களின் முன்ஜாமீன் மனுக்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை எனசென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தரன் என்பவர் தனக்கு முன்ஜாமீன் கோரி திருவள்ளூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை ஏற்க மறுத்த நீதிமன்றம், சம்பந்தப்பட்ட விசாரணை நீதிமன்றத்தை அணுக மனுதாரருக்கு அறிவுறுத்தியது.
இதேபோல ஊழல் தடுப்பு சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றமும் இந்த முன்ஜாமீன் மனுவைவிசாரிக்க மறுத்தது. இதைத்தொடர்ந்து தன் மனுவை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தரன் மனுதாக்கல் செய்தார்.
இந்த வழக்கு விசாரணை, நீதிபதிஎம்.தண்டபாணி முன்பாக நடந்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, “ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்ற அமர்வு, நீதிமன்றத்துக்கு இணையாக கருதப்படுவதால் முன்ஜாமீன் மனுவை விசாரிக்கும் அதிகாரம் சிறப்பு நீதிமன்றத்துக்கு உள்ளது என ஏற்கெனவே பாட்னா உயர் நீதிமன்றத்தின் முழுஅமர்வு உத்தரவிட்டுள்ளது” என வாதிட்டார்.
ஆனால் அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் சி.அய்யப்பராஜ், ‘முன்ஜாமீன் மனுக்களை விசாரிக்கும் அதிகாரம் சிறப்புநீதிமன்றங்களுக்கு இல்லை.
முதன்மை அமர்வு நீதிமன்றம்மற்றும் உயர் நீதிமன்றத்துக்கு மட்டுமே அந்த அதிகாரம் உள்ளது’என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ‘‘ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ்அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றத்துக்கு ஊழல் தடுப்பு தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்கு மட்டுமே அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. முன்ஜாமீன் மனுக்களை விசாரிக்கும் அதிகாரம் சிறப்பு நீதிமன்றங்களுக்கு இல்லை’ என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
பதிவுத் துறைக்கு நோட்டீஸ்
மேலும் மனுதாரர் தனக்கு முன்ஜாமீன் கோரி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மீண்டும் மனுதாக்கல் செய்ய அனுமதியளித்த நீதிபதி, இந்த விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் கவனத்துக்கு கொண்டு சென்று, கீழமை நீதிமன்றங்களுக்கு உரிய சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற பதிவுத் துறைக்கும் உத்தரவிட்டுள்ளார்.