

குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாக பிப்ரவரி 28-ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் பாஜக சார்பில்பேரணி நடைபெறும் என்று அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கே.எஸ்.நரேந்திரன் தெரி வித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
குடியுரிமை சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி), தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்பிஆர்) குறித்து சிறுபான்மை மக்களிடம் பீதியை உருவாக்கி அவர்களைக் கொண்டு சட்டவிரோதப் போராட்டங்களை நடத்திவருகின்றனர். உண்மை நிலை தெரிந்தும் மத்திய, மாநில அரசுகளுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் திமுகவும், அதன்கூட்டணி கட்சிகளும் செயல்பட்டு வருகின்றன.
குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டங்களில் வன்முறையைத் தூண்டும் வகையில் தலைவர்கள் பேசி வருகின்றனர். தலைமைச் செயலக முற்றுகைப் போராட்டத்துக்கு உயர் நீதிமன்றம் அனுமதி மறுத்த பிறகும் தடையை மீறி போராட்டத்தை நடத்தியுள்ளனர். இதற்கு சில அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
பொதுச்சொத்துகள் மட்டுமல்லாது காவல் துறை அதிகாரிகளும் தாக்கப்படுகின்றனர். ‘துக்ளக்’ வார இதழ் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி நடைபெற்றுள்ளது. இந்து அமைப்புகளின் தலைவர்களின் வாகனங்கள் எரிக்கப்படுகின்றன. சிறுபான்மையினர், இளைஞர்கள், மாணவர்கள், குழந்தைகளிடம் நஞ்சை விதைக்கிறார்கள். இதனால் தமிழகத்துக்கும் இந்திய நாட்டுக்கும் பேராபத்து ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
எனவே, தமிழகத்தின் அமைதிக்கு ஊறு விளைவிக்கும் போராட்டங்களை தடை செய்யக் கோரியும், இந்து மதத்தை அவமதிக்கும் செயல்பாடுகளை கண்டித்தும், மதரீதியான அரசியல் செய்யும் திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் வரும் 28-ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணி நடைபெறும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.