

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்பது உட்பட தங்களின் கோரிக்கை மீது 15 நாட்களில் அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் கோட்டை முன்பு சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
தேசிய - தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் பி.அய்யாகண்ணு தலைமையில் சங்க நிர்வாகிகளும், விவசாயிகளும் சென்னை கோட்டையில் உள்ள முதல்வரின் தனிப்பிரிவு அலுவலகத்திலும், வேளாண் துறை செயலாளர் ராஜேஷ் லக்கானியிடமும் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
கடந்த 4 ஆண்டுகளாக மழை பொய்த்துவிட்டதால் தமிழகம் முழுவதும் கடுமையான வறட்சி ஏற்பட்டு, குடிநீருக்கே படாதபாடு பட வேண்டியுள்ளது. விவசாய கிணறுகள், ஆழ்துளை கிணறுகள், குளங்கள், கண்மாய்கள் அனைத்தும் வறண்டு கிடக்கின்றன. தென்னை, மா உள்ளிட்ட மரங்கள் காய்ந்துவிட்டன. விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும்.
இதுதொடர்பாக மத்திய நிதி அமைச்சரை சந்தித்து முறையிட்டபோது, வறட்சி மாநிலமாக அறிவிப்பது குறித்து தமிழக அரசிடமிருந்து எந்தவிதமான அறிக்கையும் வரவில்லை என்றார். வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளின் கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். வயது முதிர்ந்த விவசாயிகளுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக நிருபர்களிடம் அய்யாகண்ணு கூறும்போது, “கோரிக்கை தொடர்பாக தமிழக முதல்வர் எங்களை அழைத்துப் பேச வேண்டும். தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்கும் வகையில் உடனடியாக மத்திய அரசுக்கு தமிழக அரசு கருத்துரு அனுப்ப வேண்டும். எங்கள் கோரிக்கை மீது 15 நாட்களில் நடவடிக்கை எடுக்காவிட்டால் கோட்டை முன்பு சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளோம்’’ என்றார்.